எக்னலிகொட வழக்கில் திருப்பம்; கைதான முன்னாள் புலிகள், அரச தரப்பு சாட்சிகளாகின்றனர்

பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவர் அரச சாட்சியாளர்களாக பெயரிடப்படவுள்ளனர்.
இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் ஊடாக அறிய முடிகின்றது.
திருகோணமலை, குச்சவெளி பகுதியைச் சேர்ந்த ஒருவரும், மட்டக்களப்பு – கல்லடி பிரதேசத்தை சேர்ந்த மற்றொருவருமே இவ்வாறு அரச சாட்சியாளர்களாக மாறியுள்ளனர்.
இவ்விருவரும் நேற்று செவ்வாய்கிழமை ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்கவின் உத்தியோகபூர்வ அறையில், இரகசிய வாக்குமூலம் ஒன்றினை வழங்கியுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
இந் நிலையிலேயே இவர்களை அரச சாட்சியாக மாற்றி, கைதாகியுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு விசாரணைகளை முன்னெடுத்து செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.