நீரில் மூழ்கிய மதரஸா மாணவர்கள் விவகாரம்: அதிபர், ஆசிரியருக்கு விளக்க மறியல்

🕔 November 29, 2024

– பாறுக் ஷிஹான் –

ழவு இயந்திரத்தில் பயணித்தபோது வெள்ளத்தில் சிக்கி மாவடிப்பள்ளி பகுதியில் உயிரிழந்த மாணவர்கள் கற்றுவந்த – நிந்தவூர் அரபு மத்ரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை டிசம்பர்  02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்படி மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நிந்தவூர் அரபு மத்ரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோர் – சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மதரஸாவின் உதவியாளர்கள் இருவரை தலா 01 லட்சம் ருபாய் பிணையில் விடுவிக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

மாவடிப்பள்ளி பாலத்துக்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் – நிந்தவூர் மதரசா அதிபர், ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் இருவர் நேற்று வியாழக்கிழமை (28) கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு வாக்குமூலம் பெற்ற பின்னர், சம்மாந்துறை நீதிமன்ற பதில் நீதவான் எம்.ரி. சபீர் அகமட்  முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன் போது மத்ரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், ஏனைய 02 உதவியாளர்களையும் தலா 01 லட்சம் ரூபாய் வீதம் சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 26ஆம் திகதி நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரியில் கற்கும் மாணவர்களை வீட்டுக்கு அனுப்ப மதரஸா நிர்வாகம் தீர்மானித்தது. ஆயினும், மாணவர்களுக்கான போக்குவரத்தை ஏற்பாடு செய்யும் விடயத்தில் மதரஸா நிர்வாகம் அலட்சியமாக நடந்து கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் மாணவர்கள் பயணம் செய்த மாவடிப்பள்ளி வீதி ஆபத்தானது என்பதால், உழவு இயந்திரத்தில் பிள்ளைகளை ஏற்றிச் செல்ல வேண்டாம் என ராணுவத்தினர் அறிவுறுத்தியிருந்தமை விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் 11 மாணவர்களுடன் சென்ற உழவு இயந்திரம் நீரோட்டத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 05 மாணவர்கள் உயிர்பிழைத்த நிலையில், 06 மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.

12 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட 06 மாணவர்கள் இவ்வாறு காணாமல் போயினர்.

இன்று வெள்ளிக்கிழமை காலை வரை 05 மாணவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் ஒரு மாணவனை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது தவிர உழவு இயந்திர சாரதி சடலமாக மீட்கப்பட்டதோடு, மற்றுமொருவரின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது. நேற்றைய தினம் இருள் சூழ்ந்த நிலை மற்றும் அதிகமான காற்று வீசியமையினால் – காணாமல் போன, மற்றொரு மாணவரைத் தேடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

ஆயினும், மீண்டும் இன்று காலை மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்களின் ஜனாஸா நல்லடக்கம் நேற்று வியாழக்கிழமை சம்மாந்துறையில் இடம்பெற்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்