எச்ஐவி நோயாளிகளில் 15 வீதமானோர் 15 – 24 வயதுடையவர்கள்: கைத்தொலைபேசியில் இணை தேடுவது தொற்று பரவ முக்கிய காரணம்
கைத்தொலைபேசிகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உடலுறவுக்கான இணையர்களைத் தேடுவது, சரியான பாலுறவு கல்வி இல்லாமை போன்ற காரணங்களால் நாட்டின் இளைஞர்களிடையே எச்ஐவி தொற்று அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பதிவான எச்ஐவி நோயாளிகளில் 15 வீதமானோர் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்று – தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளரும், சமூக மருத்துவ நிபுணருமான டொக்டர் விந்த்யா குமாரபேலி கூறியுள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக கூட்டத்தில் பேசிய டொக்டர் விந்த்யா குமாரபேலி மேலும் குறிப்பிடுகையில்; கடந்த ஆண்டில் 694 பேர் எச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ள நிலையில், எச்.வி.ஐ-யால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
“குறிப்பாக இளைஞர்கள் பற்றிய தரவுகளைப் பார்க்கும்போது, 15 வீதமான புதிய நோயாளிகள் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள். இதை மேலும் ஆராயும்போது, கைப்பேசி உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பாலியல் இணையர்களைத் தேடுவதே இதற்குக் காரணம். கைத்தொலைபேசி பாவனை, சரியான பாலியல் கல்வி இல்லாமை, சில போதைப்பொருட்களுக்கு அடிமையாதல் போன்ற விஷயங்கள் இளைஞர்களிடையே பாலியல் தொற்றுநோய்களின் அதிகரிப்புக்கு காரணமாகின்றன”என்று அவர் மேலும் தெரிவித்தார்.