“உயிருள்ள சில தலைவர்களை விடவும், ஒரு சில பொம்மைகள் ஆற்றல் மிக்கவை”: வேதாந்தி சேகு இஸ்ஸதீன்
– நேர்கண்டர் – யூ.எல். மப்றூக் –
(‘வேதாந்தி’ சேகு இஸ்ஸதீன் இன்று (28) மரணித்து விட்டார். அவரை 2009ஆம் ஆண்டு ஞாயிறு தினக்குரல் பத்திரிகைக்காக ஊடகவியலாளர் மப்றூக் பேட்டி கண்டிருந்தார். அதனை இங்கு மீள்பதிவு செய்கிறோம்)
பழைய காலத்து மன்னர்களும், மந்திரிகளும் வாழ்ந்ததாக நாம் கேள்விப்பட்ட கோட்டை போல் இருக்கிறது – அந்த மலை வீடு.
இறக்காமம் – மதீனாபுரத்திலுள்ள பிரமாண்டமானதொரு மலையின் உச்சியில் இருக்கும் அந்த வீட்டுக்குப் பெயர் ‘கவிதாயலம்’.
அங்கு பிரதியமைச்சர் சேகு இஸ்ஸதீன் வசிக்கின்றார்.
ஒதுக்குப் புறமான அந்த மலை வீட்டில் – சித்தர்கள், ஞானிகளைப் போல் வாழும் இந்தத் தனிமை வாசம்தான் இஸ்ஸதீனின் நீண்டநாள் கனவு போலிருக்கிறது.
அதனால்தான் –
‘உணர்வெல்லாம் நம்மவர்க்காய்
உடலெல்லாம் ஆயுதமாய்
எங்கோ பாதாளத்தில்
சித்தர்கள் மத்தியில்
நான் என்னையறியத்
தியானித்திருப்பேன்!’
என்று 20 வருடங்களுக்கு முன்பே அவரால் எழுத முடிந்திருக்கிறது.
‘வேதாந்தி’ என்கிற பெயரால் இலக்கிய உலகுப் பரீட்சயமான சேகு இஸ்ஸதீன், அரசியலியலுக்கு மட்டும் வராமல் போயிருந்தால், ஈழத்து இலக்கியம் மிக அற்புதமான படைப்புக்கள் பலவற்றை இன்னும் பெற்றிருக்கும்.
இளமைக் காலத்தில் நாத்திகம் பேசிக்கொண்டு திரிந்த இந்த மனிதரால், ஓர் இஸ்லாமிய மார்க்க அறிஞருக்கு இணையாக – குர்ஆனையும், ஹதீஸ்களையும் எப்படி இப்போது பேச முடிகிறது?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தோற்றுவிப்பிப்பாளர்களில் ஒருவர். அந்தக் கட்சியின் மூளையாகவும், இருதயமாகவும் செயற்பட்டவர்.
மிக அற்புதமான நகைச்சுவைகளை சிரிக்காமலேயே சொல்லி விட்டு, மற்றவர்களைச் சிரிக்க வைப்பதில் சேகு – மகா கெட்டிக்காரர். இவரின், அங்கதச் சுவையான பேச்சுக்கள் பற்றி சுவாரசியமான கதைகள் நிறையவே இருக்கின்றன.
இந்த நேர்காணலுக்காக – ஆசுகவி அன்புடீன், கவிஞர் பாலமுனை பாறூக், நண்பர்களான எஹியா மற்றும் சபுஹர் ஆகியோருடன் ஒரு ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் இஸ்ஸதீனின் மலை வீடு சென்றோம்.
அந்த நாள் முழுக்க – அவரும் நாங்களும் பேசியவற்றில் பதிவு செய்ய முடிந்தவை இவை.
கேள்வி: உங்களுக்கு மிகவும் வசப்பட்டது இலக்கியமா? அரசியலா?
பதில்: நான் இலக்கியத்தோடுதான் இருக்கிறேன். காரணம் அதில்தான் மனித நேயம் இருக்கிறது. ஒரு மந்திரியாக வரவேண்டும், தலைவராக வேண்டுமென்றெல்லாம் நான் எண்ணியதே கிடையாது.
இலக்கியத்தோடு மிக நீண்ட நாட்கள் தொடர்புகளே இல்லாமல் போயிற்று. அரசியலில் இருப்பதால் அதற்கான நேரம் கிடைப்பதில்லை. இருந்தாலும் இலக்கியத்துடனான தொடர்பு அறுந்து விடவில்லை.
கேள்வி: மு.காங்கிரஸ், முஸ்லிம் கட்சி, ஐ.தே.கட்சி, நுஆ, இப்போது – பொ.ஜ.முன்னணி என்று உங்கள் தளங்களை மாற்றிக் கொண்டேயிருக்கின்றீர்களே, இது உங்கள் மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தி விடாதா?
பதில்: ஏன் அவநம்பிக்கை ஏற்படவேண்டும். அப்படி ஏற்பட்டால்தான் என்ன? நான் உங்களிடம் வந்து வாக்குக் கேட்டேனா? அல்லது நீங்கள் மாற்றுக் கட்சிக்காரர் என்பதற்காக உங்களோடு பேசாமல் விட்டேனா?
முஸ்லிம் காங்கிரசிலிருந்து நான் விலகவில்லையே. வெளியேற்றப்பட்டேன்!
கேள்வி: முன்பெல்லாம் அக்கரைப்பற்றில் உங்கள் கொடி மட்டும்தான் பறந்துகொண்டிருந்தது. இப்போது வேறு கொடிகளும் தெரிகின்றனவே? பிடி நழுவக் காரணம் என்ன?
பதில்: முஸ்லிம் அரசியலை விட்டும், அக்கரைப்பற்று மக்கள் அபிவிருத்தி அரசியலில் ஆசை வைக்க ஆரம்பித்தமைதான் இதற்குக் காரணமாகும். யாரெல்லாம் அபிவிருத்தி அரசியல் செய்ய ஆரம்பித்தார்களோ – அவர்களுக்குப் பின்னால் அக்கரைப்பற்று மக்கள் செல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
”சலுகை வேண்டாம், உரிமைகளே வேண்டும்” என்று கூறிய மு.காங்கிரசினால் பாராளுமன்ற உறுப்பினராக்கப்பட்டவர்தான், இன்று அக்கரைப்பற்றில் அபிவிருத்தி அரசியலைச் செய்து கொண்டிருக்கின்றார்.
கேள்வி: மு.காங்கிரசில் நீங்கள் இணையப் போவதாக அடிக்கடி கதைகள் அடிபடுவதுண்டு. இது தொடர்பில் என்ன நிலைப்பாட்டில் இப்போது இருக்கிறீர்கள்?
பதில்: முஸ்லிம் காங்கிரஸ் இன்றிருக்கும் நிலையில் கழிவிரக்கம் கொண்ட, சாதாரணமான மு.காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே இருக்கின்ற ஒரு தாகம்தான் இந்தப் பேச்சு. நான் கட்சிக்குள் வரவேண்டுமென அந்த மக்கள் விரும்புகின்றார்கள்.
நான் மு.கா.வின் ஸ்தாபகர்களில் ஒருவர் என்பதால், இந்தக் கட்சி இருக்கும் நிலைமையில் கட்சிக்குக் கைகொடுத்து அதை மீளவும் நிலை நிறுத்த வேண்டும் என்கின்ற கடமைப்பாட்டை நான் உணர்ந்தவனாகத்தான் இருக்கின்றேன். ஆனால், கட்சியிலுள்ள சிலரிடையே இருக்கின்ற ஒரு சில விகாரங்கள் என்னை மு.கா.வுக்குள் ஈர்ப்பதற்கு முட்டுக்கட்டையாகவுள்ளன.
ஒரு அமைச்சராக இருந்து கொண்டே கடந்த கிழக்கு மாகணசபைக்கான தேர்தலின் போது, மின்னல் நிகழ்சியில் மு.காங்கிரசுக்கு மிகப் பகிரங்கமாகவே ஆதரவு தெரிவித்துப் பேசியவன் நான்.
மு.கா.வுக்குள் சும்மா சென்று நான் விழ வேண்டும் என சிலர் எதிர்பார்க்கிறார்கள். அப்படிச் செய்ய நான் என்ன ரோசமற்றவனா? கௌவரவத்தை ஒரு போதும் என்னால் விட்டுக் கொடுக்க முடியாது?
சொந்தக் கௌரவத்தைப் பற்றிச் சிந்திக்காத ஒருவன் – எப்படி ஒரு சமூகத்தின் கௌரவத்துக்காகப் பேச முடியும்?
பதவிக்காக போகின்றவர்கள் சும்மா போவார்கள். கடமையையும், சேவையையும் செய்ய வேண்டும் என நினைப்பவன் அவ்வாறு போக மாட்டான்.
மாற்றீடு இல்லாதவானா நான்?
கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்கள் அனைவருக்கும் – மீண்டும் இணையுமாறு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளதாக ஒரு முறை ரஊப் ஹக்கீம் கூறியிருந்தார். ஆனால், அந்த அழைப்பு எனக்குப் பொருந்தாது. காரணம், நான் – விலகிச் சென்றவனல்ல, கட்சியால் விலக்கப்பட்டவன்!
கேள்வி: உங்களுக்கும் – அமைச்சர் பேரியல் அஷ்ரப்புக்கும் இடையில் உறவுகள் இப்போது இல்லை என்கிறார்களே. அவரின் நுஆ (NUA) கட்சியில் உங்களை பெரும் பதவியில் வைத்து அழகு பார்த்தவரல்லவா அவர். என்னதான் நடந்தது?
பதில்: பேரியல் – பெரும் பதவியில் என்னை வைத்து அழகு பார்த்தவர் என்பதில் சில திருத்தங்கள் உள்ளன. என்னை அமர வைத்து, அவர் – தன்னை அழகு பார்த்துக் கொண்டார் என்பதுதான் உண்மை!
‘நுஆ’ வில் இணையுமாறு பேரியல் உட்பட அந்தக் கட்சியிலிருந்த உயர்மட்டத்தார் அனைவரும் என்னைக் கேட்டுக் கொண்டார்கள். அவ்வாறு இணையும் போது – தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியொன்றை வழங்குவதாகவும் கூறினார்கள். நான் இணைந்து கொண்டேன்.
ஒரு கட்சியின் தலைவியாக இருக்க – பேரியலுக்கு எவ்விதத் தகுதியும் கிடையாது. இதை அவரிடமும், அவரின் மகனிடமும் கூட நான் கூறியிருக்கின்றேன். ஆனால், கட்சியொன்றின் அல்லது சமூகத்தின் பேச்சாளராக இருப்பதற்கு அவரை விடவும் பொருத்தமானவர் நமது சமூகத்தில் இல்லை. இது – எனது சொந்த அபிப்பிராயம்.
அவர் – நல்லதொரு தாய், நல்லதொரு மனைவி, நல்லதொரு சினேகிதி! அவரைப் பற்றிச் சொல்ல நல்ல விடயங்கள் ஏராளமாக இருக்கின்றன.
ஆனால், சில விடயங்களில் நான் மிகவும் நுணுக்கம் பார்ப்பவன். எனது கௌரவத்தை யாராவது எட்டிக் கடந்து போனால் கூட – அது எனக்குப் பிடிக்காது. மிதிக்கத்தான் வேண்டும் என்றெல்லாம் இல்லை.
கேள்வி: இப்போதைய அரசில் முஸ்லிம் அமைச்சர்கள் வெறும் பொம்மைகள் என்று விமர்சிக்கப்படுகிறார்களே?
பதில்: இந்த அரசாங்கத்தில் – முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளால் அமைச்சரானவர்களும், அப்படி இல்லாமல் – என்னைப் போல் அமைச்சரானவர்களும் என, முஸ்லிம் அமைச்சர்களில் இரு சாரார் இருக்கின்றார்கள். எனவே – இந்தக் குற்றச்சாட்டோ, அல்லது இந்தக் குற்றச்சாட்டினூடாக வெளிப்படும் அவாவுதல்களோ என்னைக் கட்டுப்படுத்தாது.
நீங்கள் ஏன் வெறும் பொம்மைகளாக இருக்கின்றீர்கள் என்று என்னைக் கேட்க முடியாது. நான் சிங்களவர்களின் வாக்குகள் பெற்றுக் கொடுத்த தேசியப்பட்டியலினூடகத் தெரிவானவன். முஸ்லிம் சமூகம் எனக்கு வாக்களித்து, அவர்களின் பிரதிநிதியாக அனுப்பி வைத்ததா? இல்லையே!
உயிருள்ள சில தலைவர்களை விடவும், ஒரு சில பொம்மைகள் ஆற்றல் மிக்கவை!
கேள்வி: அப்படியென்றால் உங்களுக்கென்றொரு சமூகப் பொறுப்பில்லையா?
பதில்: முஸ்லிம் சமூகம் தன்னுடைய பொறுப்புக்களுக்காகத் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளும், அமைச்சர்களும் எப்போது தங்களுடைய பொறுப்புக்களையெல்லாம் நிறைவு செய்கின்றார்களோ – அப்போது என்னுடைய சமூகப் பொறுப்புப்பற்றி நான் யோசிக்கத் தொடங்குவேன்.
நாங்கள் தெரிவு செய்தவர்கள் எல்லோரும் அவர்களுடைய பொறுப்புக்களை நிறைவு செய்து விட்டார்கள். நீ மட்டும் ஏன் சும்மாயிருக்கின்றாய்? ஏன்று மக்கள் கேட்கும் நிலையொன்று வரும்போது, எனது பொறுப்பை இந்த சமூகத்துக்கு வழங்குவேன்.
முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக நான் தேர்தலில் போட்டியிட்டபோதே, கட்சிக்குள் இருந்து கொண்டு பிரதேசவாதம் பேசிய சிலர் – அவர்களின் பகுதிகளில் எனக்கு வாக்களிக்க விடாமல் செய்த வரலாறும் உண்டு.
சொல்லுங்கள்! முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளைப் பெற்று – அந்தச் சமூகத்துக்குக் கடமைப் பட்டவர்கள் – தமது பொறுப்புக்களையெல்லாம் நிறைவு செய்து விட்டார்களா?
கேள்வி: அரசியலில் நீங்கள் எதையாவது சாதித்துள்ளதாக நினைக்கின்றீர்களா?
பதில்: அம்பாரை மாவட்டத்தில் எந்தவொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராலும் முடியாததொரு விடயத்தை சாதித்திருக்கின்றேன். அது – மூன்று தடவை நான் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரானமை. இது சாதனையில்லையா?! இதைச் சாதனையென்று நீங்கள் நினைக்கவில்லையா? (சிரிக்கிறார்)
கேள்வி: முஸ்லிம் காங்கிரஸின் இருப்பு என்பது அவசியமா? இல்லையா?
பதில்: முஸ்லிம்களுக்கு ஒரு கட்சி அவசியம். இப்போது அதற்குப் பொருத்தமானது முஸ்லிம் காங்கிரஸ்தான். ஆனால், காங்கிரசுக்குள் இப்போது சில சரிவுகளும், சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ளன. இவற்றைச் சரி செய்து, மீண்டும் மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதத்தில் கட்சியை மீளப்புச் செய்ய வேண்டும். வெறுமனே மாமூலான ஒரு கட்சியாக மு.காங்கிரசை வைத்துக் கொண்டிராமல், முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளையும், தேவைகளையும் பெற்றுக் கொடுக்கின்ற ஒரு அரசியல் ஸ்தாபனமாக மீண்டும் அதை மாற்ற வேண்டும்.
தலைவர்களில் ஒருவர் பலமானவராக இருப்பார். அடுத்தவர் சற்று பலம் குறைந்தவராக இருப்பார். பலம் குறைந்தவர் அல்லது சற்று பலவீனமானவர் தலைவராக இருக்கின்றார் என்பதற்காக கட்சியை இல்லாமலாக்கி விட முடியாது.
முஸ்லிம் காங்கிரசுக்குள் இருக்கின்ற படிப்பாளிகள் இப்போது பதட்டமாக உள்ளனர். கட்சியினுடைய போக்கில் அவர்கள் மிகவும் அதிருப்தியடைந்த நிலையில்தான் இருக்கிறார்கள். ஆனால், கட்சியை உதறும் நிலையில் அவர்கள் இல்லை. காரணம், அது முஸ்லிம் சமூகத்தின் கட்சி.
கேள்வி: எப்படி நீங்கள் வேதாந்தி ஆனீர்கள்?
பதில்: வேதாந்தி ஆகவில்லை. ஆக்கப்பட்டேன். வேதாந்தியென்றால் – வேதத்தின் அந்தங்களை அறிந்தவன் என்று பொருள். ஆனால், இந்த அர்த்தத்தின் பாரத்தைக் கூட, அறியாத வயதில் – நானே எனக்குச் சூட்டிக்கொண்ட பெயர்தான் இது. அப்போது 17 அல்லது 18 வயதுதான் இருக்கும்.
சிறுகதைகள் எழுதும் போதே இந்தப் புனைப் பெயரைச் சூட்டிக்கொண்டேன். அந்த வயதில் அறிவுடைய தாகமும், தேடலும் இருந்தது.
இளம் வயதிலேயே மிகப்பெரிய வேதாந்தங்களையெல்லாம் பேசிக் கொண்டு திரிந்திரிக்கின்றேன். அதற்கான பின்னணி என்ன என்றெல்லாம் கூற முடியவில்லை.
சிலருக்கு 40 வயதில் உதிப்பது, ஒரு சிலருக்கு 17 வயதுகளிலேயே கிடைத்து விடும். அவ்வளவுதான்.
கேள்வி: அரசியலில் யாராக இருக்க ஆசைப்படுகிறீர்கள்?
பதில்: அரசியலில் யாராகவும் இருக்க விரும்பவில்லை. இன்னும் சொன்னால், அரசியலிலேயே இருக்க விருப்பமில்லை.
அப்படியென்றால், ஏன் இன்னும் இதில் ஒட்டிக் கொண்டிருக்கின்றேன் என நீங்கள் நினைக்கலாம். இறைவன் எனக்கு இந்தப் பதவியைத் தந்துள்ளான். அதனால், இதை வைத்துக் கொண்டிருக்கின்றேன் (வாய் விட்டுச் சிரிக்கின்றார்).
நபிகள் நாயகமே சொல்லியிருக்கின்றார்கள் ”இறைவன் உனக்கு உணவளிப்பதற்கான ஒரு வழியை ஏற்படுத்தித் தந்துள்ளானனென்றால், நீ அவசரப்பட்டு அதை மாற்றிக் கொள்ளாதே” என்று!
ஆக, அமைச்சர் எனும் இந்த தொழிலினூடாக இறைவன் எனக்கு உணவளிக்கின்றான். நான் ஏன் இதை அவசரப்பட்டு மாற்ற வேண்டும். அல்லது கைவிட வேண்டும். ஆண்டவன் நாடினால், இதை எடுத்து விட்டு வேறொன்றைத் தருவான்.
கேள்வி: தமிழ் – முஸ்லிம் உறவுகள் இப்போது உண்மையான முகத்தோடு இயங்குவதாக நீங்கள் நம்புகிறீர்களா?
பதில்: முஸ்லிம்களுக்குள்ளேயே இன்று நல்லுறவில்லையே. அடுத்த பிரதேசத்தவன் நமது ஊரில் கடையொன்றை வைப்பதற்கு வந்தாலே நாம் விடுவதில்லை.
இதுபோலவே, நமது பகுதியிலுள்ள தமிழர்களைப் பாருங்கள். வறுமையின் நிமித்தம் தமது காணிகளை விற்கும் போது கூட, அதை முஸ்லிம்களுக்குத்தான் விற்பார்கள். தமிழர்களுக்கு கொடுப்பதில்லை. இது அவர்களின் மனநிலை.
இந்த லட்சணத்தில், தமிழ் – முஸ்லிம் உறவு பற்றிப்பேச என்ன இருக்கிறது.
அவரவர்களுக்குள்ளேயே இப்படி நிறையப் பிரச்சினைகள் இருக்கும் போது, அனைத்திலும் முழுமையான வேறுபாடுகளைக் கொண்ட இரண்டு சமூகங்களுக்கிடையில் அத்தனை சுலபத்தில் நாம் எதிர்பார்க்கும் ஒற்றுமை எப்படி வரும்?
ஆனால், 25, 30 வருடங்களுக்கு முன்னர் சாதாரண தமிழ் – முஸ்லிம் மக்கள் மிகவும் அந்நியோன்யமாக இருந்தார்கள்.
பிழையாக வழிநடத்தப்பட்ட அரசியல் சிந்தனைகளால், இரண்டு சமூகங்களுக்கிடையிலும் பிளவுகள் ஏற்பட்டுப் போயிற்று.
இருந்தாலும், இப்பகுதியிலுள்ள தமிழ் – முஸ்லிம் மக்கள் பழையபடி ஒற்றுமையாகவும், சந்தோசமாகவும் இருக்கவே இப்போது விரும்புகின்றார்கள் என்றுதான் நினைக்கின்றேன்.
என்னுடைய தாய்மொழி தமிழ். அந்த மொழியைப் பேசுகின்ற அனைவரையும் நான் நேசிப்பேன்.
கேள்வி: இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை முஸ்லிம்களின் முதுகில் எழுதப்பட்ட அடிமை சாசனமாக விமர்சித்தவர் நீங்கள். தற்போது – கிழக்கு மாகாணசபையை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: முஸ்லிம் காங்கிரஸில் நாங்கள் இருந்தபோது, எங்களுடைய சிந்தனையில் மூன்று மாகாணசபைகள் இருந்தன. அவை: வடக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆகிய மாகாணசபைகள். இன்னும் தென்கிழக்கு மாகாணசபை என்பது என்னுடைய கற்பனையில் இருக்கிறது.
பெரும்பான்மையான முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய சபையொன்று இந்த நாட்டில் இருக்க வேண்டும். அது கிழக்கு மாகாணத்தில்தான் சாத்தியம். அப்போதுதான் முஸ்லிம்களுக்கு அரசியல் ரீதியிலானதொரு கௌரவமும், சர்வதேசிய ரீதியில் அங்கீகாரமும் மேலோங்கிக் கிடைக்கும்.
தற்போதைய கிழக்கு மாகாணசபை என்பது – கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அபிலாசையல்ல. இது அவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு விடயம்.
கிழக்கு மாகாணமானது இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட வேண்டும். அதில் ஒன்று – தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்வதாகவும், மற்றையது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்வதாகவும் இருக்க வேண்டும். அதாவது, முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களை நிலத் தொடர்பற்ற முறையில் ஒன்றாக்கி அதற்கு ‘தென்கிழக்கு மாகாண சபை’ என பெயரிட வேண்டும் என்பது எமது லட்சியமாக இருந்தது. இன்னும் இருக்கிறது.
ஆனால், முஸ்லிம் அரசியலில் ஏற்பட்ட முரண்பாடுகளாலும், பிழையான போக்குகளாலும் இதை எம்மால் வென்றெடுக்க முடியவில்லை.
ஆனால், இந்தத் தென்கிழக்கு மாகாண சபையானது கடைசிவரை கிடைக்கவில்லையென்றால், அரசியல் ரீதியில் இது முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் தோல்வியாகும்.
கேள்வி: ‘வடக்கு – கிழக்கை பிரித்தாள்வதன் மூலம் அமைதி கிடைக்கும்’ என்கின்ற அமைச்சர் அதாஉல்லாவின் கோசம் குறித்த உங்கள் கருத்து?
பதில்: முஸ்லிம் சமூகத்தைப் பற்றிப் பேசுமளவு அதாஉல்லாவுக்கு அரசியல் தெரியாது! தனது சொந்த அரசியலை – நிலை நிறுத்த அமைச்சர் அதாஉல்லாவுக்கு எதுவெல்லாம் உபாயமாகப் படுகின்றதோ அவற்றைத்தான் அவர் பேசுகிறார். அவ்வாறு பேசுவதை அவரும், அவரைச் சார்ந்தவரும் ‘அரசியல்’ என்று சொல்கிறார்கள். அவர்களை நாம் மன்னிக்க வேண்டும்.
ஒன்றைப் பிரிப்பதாலோ, இரண்டைச் சேர்ப்பதாலோ அமைதியைக் கொண்டு வந்து விட முடியாது.
சிந்தனையில் மாற்றங்கள் ஏற்படாத வரையில், சிறுபான்பையினருடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று இருதயபூர்வமாகச் சிந்திக்காத வரையில் – அமைதியைக் கொண்டுவர முடியாது!
அமைதி என்பது சத்தமில்லாமல் இருப்பதல்ல. இருதயபூர்வமாக ஒரு மனிதன் சாந்தியடையும் நிலை!
கேள்வி: இருபதில் நாத்திகம் – நாற்பதில் ஆத்மீகம் – அறுபதில் சூபித்துவம்! இப்படி உங்களை அடையாளம் கண்டு வைத்திருக்கின்றார் ஒரு மூத்த இலக்கியவாதி. இதுபற்றிப் பேசுங்களேன்?
பதில்: நீங்கள் சொன்ன இந்த மூன்று விடயங்களும் – ஒரே விடயத்தைப் பற்றிய யோசனைதான். அதாவது இறைவனைப் பற்றிய யோசனை!
நாத்திகம் என்பது இறைவன் என்பதைப் பற்றிய வாதம். ஆனால், அதில் பேசப்படுவதென்னவோ இறைவனைப் பற்றித்தான்.
கேள்வி: உங்களின் இலக்கியச் செயற்பாடுகளுக்குரிய போதுமான மதிப்பீடு – ஈழத்து இலக்கியப் பரப்பில் கிடைத்துள்ளதாக நீங்கள் நம்புகின்றீர்களா?
பதில்: இலக்கியங்களைப் படைக்கும் போது – அவை பேசப்படவேண்டும் அல்லது மதிப்பீடு செய்யப்பட வேண்டும் அல்லது எனக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்கின்ற எண்ணமெல்லாம் என் சிந்தனையில் இருப்பதில்லை.
அதனால், எனது படைப்புகளுக்கான மதிப்பீடுகள் பற்றி எனக்குத் தெரியாது. அதன் பின்னாலெல்லாம் நான் போகவுமில்லை.
எனது ‘இருளின் நிழலில்’ கவிதைத் தொகுப்பு இலக்கியவாதிகளில் 10 வீதமானவர்களைக் கூட சேர்ந்திருக்குமா என்பது சந்தேகம்தான். எனவே, அவர்களிடம் சென்று சேராத ஒரு விடயத்தைப் பற்றி, அவர்கள் மதிப்பீடு செய்யவில்லை என்று நாம் குறை கூற முடியாது!
என்னுடைய படைப்புகள் பற்றிய ஏனையவர்களின் மதிப்பீடுகள், எனது இலக்கியச் செயற்பாடுகளில் எவ்விதமானதொரு தாக்கத்தினையும் ஏற்படுத்தி விடாது என்றுதான் நான் நம்புகிறேன்.
இருந்தாலும் படித்தவர்கள் நமது படைப்புகளைப் பற்றி நல்ல கருத்துக்களைச் சொல்லும் போது, மனதுக்குள் ஒரு சந்தோசம் தோன்றாமலுமில்லை.
உலக இஸ்லாமிய தமிழாராய்ச்சி மாநாடு கடந்த வருடம் நடைபெற்றபோது, ஈழத்துக் கவிஞர்களைப் பற்றி ‘ஹிந்து டைம்ஸ்’ பத்திரிகையில் ஒரு கட்டுரை ஆங்கிலத்தில் வெளிவந்திருந்தது. பேராசிரியர் கா. சிவத்தம்பி எழுதியிருந்தார் அதில் – ஏநவாயவொi ளை யn நஒஉநடடநவெ pழநவ (வேதாந்தி ஒரு அற்புதமான கவிஞர்) என்று என்னைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிட்டிருந்தார்.
என்னுடைய ‘இருளின் நிழலில்’ கவிதைத் தொகுப்புக்கும் பேராசிரியர் சிவத்தம்பிதான் முகவுரை எழுதினார். அந்த நூலைச் தொகுத்த பௌசர்தான் பேராசிரியரிடமிருந்து முகவுரையைப் பெற்றிருந்தார். ஆனால், சிவத்தம்பி அவர்களை இதுவரை நான் சந்தித்ததேயில்லை!
கேள்வி: இன்றுவரை மு.கா. தலைவர் அஷ்ரப் இருந்திருந்தால், முஸ்லிம் சமூகத்தில் எவைகளெல்லாம் நிகழ்ந்திருக்கும், எவைகளெல்லாம் நிகழ்ந்திருக்க மாட்டாது?
பதில்: அஷ்ரப் இறந்த பிறகு அரசியலில் எனக்குள் ஒரு வெறுமை ஏற்பட்டுப் போயிற்று! எனது வேகத்தில் ஒரு தணிவு ஏற்பட்டுப் போயிற்று. காரணம், நான் மிக நல்லதொரு எதிராளியை இழந்து போனேன்.
நான் வழிகாட்ட வேண்டியதொரு மனிதனை இழந்து போனேன். அதற்குப் பிறகு அந்த இடத்தில் வேறு யாருமே உட்காரவில்லை!
அஷ்ரப்போடு இருந்துகொண்டு – அவரை நான் வழி நடத்தியதை விடவும், வெளியில் இருந்து கொண்டு எனது விமர்சனங்களால் அவரை மிக அதிகமாக வழி நடத்தியிருக்கின்றேன்.
அஷ்ரப்பின் கடைசி காலத்து அரசியல் போக்குகளுடன் எனக்கு உடன்பாடு கிடையாது. அளவுக்கதிகமான அதிகாரம் ஒருவரைக் கெடுத்து விடும் என்பதை நான் அஷ்ரப்பில் கண்டேன். அஷ்ரப் விட்ட சில பிழைகளை வைத்து நான் என்னைத் திருத்தியிருக்கிறேன்.
அதிகாரம் நம்மைக் கெடுத்து விடக் கூடாது என்பதில் நான் மிகக் கவனமாக இருக்கிறேன்!
ஆனால், அஷ்ரப்பின் மரணத்தைப் போல் கவலையானது வேறெதுவுமில்லை.
அஷ்ரப் மரணித்திருக்கக் கூடாது.