மாவடிப்பள்ளி அனர்த்தம்: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த 07 பேர் ஜனாஸாக்களாக மீட்பு
– பாறுக் ஷிஹான் –
மாவடிப்பள்ளி பாலத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்தபோது வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் 07 பேர் சடலங்களாக தற்போது வரை மீட்கப்பட்டுள்ளர்.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே உழவு இயந்திரத்தில் சம்மாந்துறை பிரதேசத்திற்கு வீடு திரும்பிக்கொண்டிருந்த மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட சிலர் – வௌ்ளத்தில் சிக்கி கடந்த செவ்வாய்க்கிழமை (26) மாலை காணாமல் போயினர்.
பின்னர் அதே தினம் – வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட 05 மாணவர்கள் உயிருடன் காப்பாற்றப்பட்டனர்.
அடுத்து காலநிலை சீர்கேடு மற்றும் இருள் காரணமாக மீட்பு பணிகள் மறுநாள் புதன்கிழமை (27) ஆரம்பமாகிய நிலையில் 04 மத்ரஸா மாணவர்களின் ஜனாஸாக்கள் மீட்கப்பட்டன. முகமட் ஜெசில் முகமட் சாதீர் (வயது-16), அப்னான், பாறுக் முகமது நாஸிக் (வயது-15), சஹ்ரான் (வயது-15) ஆகியோரே மரணித்த நிலையில் மீட்கப்பட்டனர்.
அடுத்து வியாழக்கிழமை மூன்றாவது நாளான இன்று (28) 03 சடலங்கள் மீட்கப்பட்டன. மாணவர் அலியார் முகமது யாசீன் (வயது-15), உழவு இயந்திர சாரதி உதுமாலெப்பை முகமது அகீத் (வயது-17), கல்முனை புகை பரிசோதனை நிலைய ஊழியர் அஸ்மீர் ஆகியோர் ஜனாஸாக்களாக இவ்வாறு மீட்கப்பட்டனர்.
அந்த வகையில் இதுவரை மொத்தமாக 07 சடலங்கள் மீட்கப்பட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
குறித்த உழவு இயந்திரத்தில் 11 பேர் பயணம் செய்ததாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதில் அதற்கும் அதிகமானோர் பயணம் செய்திருந்ததாக தற்போது தெரியவருகிறது.
தொடர்பான செய்தி: 11 பேருடன் மாவடிப்பள்ளியில் விபத்துக்குள்ளான உழவு இயந்திரம்: 05 பேர் காப்பற்றப்பட்டனர்; 02 ஜனாஸாக்கள் மீட்பு: தேடுதல் தொடர்கிறது