மாவடிப்பள்ளி அனர்த்தம்: நாலாவது ஜனாஸா மீட்பு; தேடுதலில் ஹெலிகொப்டரும் இணைந்தது
பிந்திய செய்தி
மாவடிப்பள்ளியில் உழவு இயந்திரத்தில் பயணித்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி – வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனோரில், நான்காவது நபரின் உடலும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விமானப்படையின் ஹெலிகொப்டரும் இன்றைய தினம் தேடுதலில் ஈடுபட்டது.
முகமட் ஜெசில் முகமட் சாதீர்(வயது-16), அப்னான், பாறுக் முகமது நாஸிக்(வயது-15) மற்றும் சஹ்ரான் (வயது-15) ஆகியோரர் ஜனாஸாகளாக மீட்கப்பட்டுள்ளனர்
முந்தைய செய்தி
மாவடிப்பள்ளியில் உழவு இயந்திரத்தில் பயணித்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி – வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனோரில், மற்றொருவரின் ஜனாஸாவும் மீட்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது வரை (27ஆம் திகதி பி.ப. 5.00 மணி) 03 ஜனாஸாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதுவரை மீட்கப்பட்டுள்ள அனைவரும் மதரஸா மாணவர்களாவர். இவர்கள் சம்மாந்துறையைச் சேர்ந்தவர்களாவர்.
தற்போது மீட்கப்பட்ட ஜனாஸாவும் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நிந்தவூரிலுள்ள மதரஸா ஒன்றில் கற்கும் 06 மாணவர்கள் உள்ளடங்கலாக 11 பேர், நேற்று (26) உழவு இயந்திரத்தில் சம்மாந்துறை நோக்கி பயணம் செய்தனர். இதன்போது – குறித்த உழவு இயந்திரம் புரண்டு – வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இதில் நேற்றைய தினம் 05 பேர் காப்பாற்றப்பட்ட நிலையில், இன்று – இதுவரை மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இன்னும் மூவரைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.