தாழமுக்கம் – புயலாக மாறும் சாத்தியம்: வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் பலத்த காற்று வீசும்

🕔 November 27, 2024

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலவும் ஆழ்ந்த தாழமுக்கம் காரணமாக – வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

குறித்த தாழமுக்கம் திருகோணமலையிலிருந்து கிழக்கு திசையாக 130 கிலோமீற்றர் தொலைவில் இன்று (27) அதிகாலை 5.30 அளவில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இது கிழக்கு கரையை நெருங்கி, எதிர்வரும் 12 மணிநேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறுவதற்கான சாத்தியம் உள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

அதன்படி, வடக்கு, வடமத்திய, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் 150 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். 

நாட்டின் ஏனைய பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். 

அதேநேரம், வடக்கு, வடமத்திய, மத்திய, மேல், வடமேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்கூறியுள்ளது. 

கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் மறு அறிவித்தல் வரை நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவதுடன், இடைக்கிடையே காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும். 

இதேவேளை, இன்று காலை 8:30 உடன் முடிவடைந்த 24மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் அதிளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

அதன்படி, குறித்த பகுதியில் 253 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

அத்துடன், துணுக்காய் பகுதியில் 250 மில்லிமீற்றரும், அச்சுவேலியில் 245 மில்லிமீற்றரும் மழைவீழச்சி பதிவாகியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்