11 பேருடன் மாவடிப்பள்ளியில் விபத்துக்குள்ளான உழவு இயந்திரம்: 05 பேர் காப்பற்றப்பட்டனர்; 02 ஜனாஸாக்கள் மீட்பு: தேடுதல் தொடர்கிறது
🕔 November 27, 2024
– பாறுக் ஷிஹான் –
மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே உழவு இயந்திரத்தின் பெட்டியில் பயணித்த போது விபத்துக்குள்ளாகி, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் இரண்டு மதரஸா மாணவர்களின் ஜனாஸாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே 11 பேர் பயணம் செய்த உழவு இயந்திரம், வெள்ள நீரில் அகப்பட்டு தடம்புரண்ட நிலையில், அதில் பயணம் செய்தவர்கள் காணாமல் போயிருந்தனர்.
நிந்தவூரில் இருந்து நேற்றைய தினம் (26) சம்மாந்துறை நோக்கிச் சென்ற உழவு இயந்திரமே விபத்திற்குள்ளானது. இதன்போது, அந்த உழவு இயந்திரத்தின் பெட்டியில் 11 பேர் பயணம் செய்தனர்.
நிந்தவூரிலுள்ள மதரஸா ஒன்றில் கற்கும் மாணவர்கள் – நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, தங்கள் ஊரான சம்மாந்துறைக்கு சென்று கொண்டிருந்தனர். இதன்போது மாணவர்களுடன் மேலும் சிலரும் பயணித்தனர்.
இந்த விபத்தில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 05 பேர் – நேற்றைய தினம் காப்பாற்றப்பட்டனர். அவர்கள் அருகிலுள்ள மின் கம்பமொன்றை பிடித்துக் கொண்டிருந்த நிலையில் காப்பாற்றப்பட்டதாக தெரியவருகிறது.
விபத்தையடுத்து தேடுதல் நடவடிக்கையில் ராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரும் பங்கேற்றிருந்தனர். வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்ட உழவு இயந்திரமும் மீட்கப்பட்டுள்ளது. தற்போது மீட்கப்பட்ட ஜனாஸாக்கள் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டுள்ளன.
அந்த வகையில் இன்னும் நால்வரை தேடும் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.