மரண தண்டனைக் கைதிக்கு பொது மன்னிப்பு வழங்கியமைக்கு பணம் பெற்றார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் மைத்திரியிடம் வாக்குமூலம்

🕔 November 26, 2024

ஜூட் ஷ்ரமந்த அந்தோனி ஜயமஹா என்பவருக்கு 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பு குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் – லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (26) ஆஜராகி வாக்குமூலம் வழங்கினார்.

19 வயதான ஸ்வீடன் – இலங்கை பிரஜையான யுவோன் ஜோன்சன் என்பவரை கொடூரமாகக் கொன்ற வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயமஹாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்காக பணம் பெறப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மனுவில் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.

2005 ஆம் ஆண்டு ஜூலை 01ஆம் திகதி ராஜகிரியவில் உள்ள ரோயல் பார்க் காண்டோமினியம் வளாகத்தில் நடந்த கொலையில், யுவோன் ஜோன்சன் படிக்கட்டில் அடித்து கழுத்து நெரித்து கொல்லப்பட்டார். இந்தக் குற்றத்துக்காக முதலில் ஜெயமஹாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில் 2019இல் மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதிப் பதவியின் இறுதி நாட்களில், ஜயமஹாவுக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்புக் கிடைத்தது. இது பொதுமக்களிடையே கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது.

மைத்திரி வழங்கிய அந்தப் பொதுமன்னிப்பு அரசியலமைப்புக்கு முரணானது என, 2024இல் உச்ச நீதிமன்றம் அறிவித்து – அதனை ரத்து செய்தது. மன்னிப்பு வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சிங்கப்பூருக்கு தப்பிச் சென்ற ஜெயமஹா இன்றுவரை தலைமறைவாக உள்ளார்.

அவ்வேளையில், பௌத்த மதத் துறவிகளான அதுரலியே ரத்ன தேரர், பத்தேகம சமித்த தேரர் மற்றும் கலாநிதி கெரதேவல புன்னரதன நாயக்க தேரர் உட்பட முக்கியஸ்தர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இந்த விவகாரத்தில் ஜயமஹாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்காக, மைத்திரிபால சிறிசேன அல்லது அதுரலியே ரத்தின தேரர் லஞ்சமாக பணத்தைப் பெற்றார்களா என்பதை விசாரிக்குமாறு லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் 2022ஆம் ஆண்டு ஜுலை மாதம் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொன்டேக் சரச்சந்திரவினால் முறைப்பாடு செய்யப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்