மன்னாரில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த றிஷாட் பதியுதீன்: அரசாங்க அதிபருடனும் கலந்துரையாடல்

🕔 November 25, 2024

ன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் இன்றைய தினம் (25) நேரடியாகச் சந்தித்து அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்தார்.

இதனையடுத்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருடனும் மக்களின் தேவைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களிடம் அவர் பேசினார்.

“மன்னார் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, சுமார் 7500 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்துப் பேசினேன்.

குடியிருப்புக்கள் நீரில் மூழ்கியுள்ளதால், உணவுகளை சமைக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, இது தொடர்பில், மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் நாயகத்துடனும், மேலதிக செயளாலருடனும் பேசியுள்ளோம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான சமைத்த உணவுகளை தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு வழங்குவதற்கும், உலர் உணவுப் பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுள்ளேன்.

வெள்ளநீர் வழிந்தோடுவதற்கான பணிகளை, பிரதேச செயலகம், பிரதேச சபை, நகரசபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வீதி அபிவிருத்தித் திணைக்களம் போன்ற அமைப்புக்களுடன் இணைந்து மேற்கொள்ளுமாறு, அரசாங்க அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். மேலும், அந்தப் பணிகளை செய்வதற்கான நிதி வசதிகளை வழங்குமாறு அரசாங்கத்திடம், எழுத்து மூலமாகவும் நேரடியாகவும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, எதிர்வரும் தினங்கள் மிகவும் ஆபத்தாக காணப்படுவதால், பாதுகாப்புத் தரப்பினரின் உதவியுடன், மக்களின் பாதுகாப்புக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வேண்டியுள்ளோம்.

அத்துடன், பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாத்திரமே உணவுகள் வழங்கப்படுகின்றது எனவும் வெள்ளத்தினால் வெளியேற முடியாமல் வீடுகளிலேயே தங்கியுள்ள மக்களுக்கு உணவுகள் வழங்கப்படவில்லை எனவும் அறிய முடிகின்றது.

இது குறித்து, துரித கதியில் கவனம் செலுத்தி, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், வெளியேற முடியாமல் வீடுகளுக்குள் இருக்கும் மக்களுக்கும் தேவையான உலர் உணவுகள் மற்றும் சமைத்த உணவுகளை வழங்குவதற்கு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அரசாங்க அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்