புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வழிகாட்டல் அமர்வு ஆரம்பம்
நாடாளுமன்றத்துக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான வழிகாட்டல் அமர்வு இன்று (25) நாடாளுமன்ற வளாகத்தில் ஆரம்பமானது.
இந்த வழிகாட்டல் அமர்வு இன்று 25ஆஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையிலான நாட்களில் காலை 9.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை நடத்தப்படும்.
இதில் பிரதமர், சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர், அரசாங்கத்தின் பிரதம கொறடா, நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற செயலாளர் நாயகம், பிரதி செயலாளர் நாயகம், உதவி செயலாளர் நாயகம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த மூன்று நாள் அமர்வின்போது, நாடாளுமன்ற உறுப்பினரின் வகிபங்கு, பொறுப்புகள், நாடாளுமன்ற சிறப்புரிமைகள், நாடாளுமன்றத்தில் சட்டமியற்றும் செயல்முறை, நாடாளுமன்றக் குழு அமைப்பு, நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் மற்றும் அரசியலமைப்பின் விதிகள் குறித்து எம்.பி.க்களுக்குக் கற்பிக்கப்படும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலத்திரனியல் வாக்குப்பதிவு முறையை பயன்படுத்தி வாக்களிப்பதற்கான நடைமுறை அமர்வையும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தொடர்பான சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்தும், பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தின் நாடாளுமன்ற விவகாரப் பிரிவின் வகிபங்கு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
நாடாடளுமன்றத்தின் திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களின் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அந்தந்த துறைகள் தொடர்பான பணிகள் குறித்து இந்த வழிகாட்டல் அமர்வின் போது விளக்கமளிப்பார்கள்.