டொக்டர் அர்ச்சுனா தனிநாடு கோசம் எழுப்பிதாக சிஐடியில் முறைப்பாடு
யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ச்சுனா ராமநாதன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சிவில் செயற்பாட்டாளர் குணரத்ன அதிகாரி முறைப்பாடு செய்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்; புதிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் அறிக்கைகள் மற்றும் நடத்தைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனக் கூறினார்.
“இலங்கையின் அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதாக சத்தியப்பிரமாணம் செய்த பின்னர், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ‘தனிநாடு’ என்று அவர் கருத்துத் தெரிவித்திருந்தார்” என்று குணரத்ன அதிகாரி குறிப்பிட்டார்.
நாடாளுமன்றின் முதல் நாள் அமர்வின் போது, எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்து கொண்ட டொக்டர் அர்ச்சுனாவிடம், அது எதிர்க்கட்சித் தலைவருக்குரிய ஆசனம் என்பதைச் சுட்டிக்காட்டி – வேறோர் ஆசனத்தில் அமருமாறு கூறியபோதும், அதனை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
மேலும் நாடாளுமன்றத்திலிருந்து தனது பேஸ்புக் பக்கத்தின் ஊடாக நேரலையாகத் தோன்றிப் பேசிய டொக்டர் அர்ச்சுனா, தான் – தமிழீழத்திலிருந்து பேசுவதாகக் கூறினார்.