சலுகைகளைக் குறைத்தல்: அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான நிதியை ஒதுக்குவதற்கு அமைச்சரவை தனது முதல்அங்கிகாரத்தை வழங்கியுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நேற்று (30) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சரவைப் பேச்சாளராக அமைச்சர் விஜித ஹேரத்தை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்தது.
“தேர்தலுக்கான செலவு 11பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதற்காக 05 பில்லியன் ரூபாயை திரட்டு நிதியத்திலிருந்து ஒதுக்குவதற்கும், மேலதிக 06 பில்லியன் ரூபாயினை, 2025ஆம் ஆண்டின் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படும் – இடைக்கால நிறைவேற்றுக் கணக்கிலிருந்து பெறுவதற்கும்” அமைச்சரவை அனுமதியளித்துள்ளது என, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது அமைச்சரவைத் தீர்மானமாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் மற்றும் சலுகைகளைக் குறைப்பதற்கும் பொருட்டு, அவ்விடயம் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கு குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் கூடிய முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில், 07 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.