ரணிலுக்கு ஆதரவளித்தவர்கள் ஒன்றாக போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடல்: முஷாரப்பும் கலந்து கொண்டார்
ரணில் விக்ரமசிங்கவுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்கியவர்கள் ஒன்றாக இணைந்து போட்டியிடுவது தொடர்பில் இன்று (28) கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
கொழும்பில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது, ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியமைத்து செயற்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஒரு தரப்பினர் கூறியுள்ளனர். ஆனால், பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து சென்று ரணிலுக்கு ஆதரவளித்தவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
அந்த கலந்துரையாடலின் பின்பு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க, ”ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்தால், ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புள்ள அனைவரையும் இணைத்துக் கொள்ள முடியும்” என்றார்.
மேலும், ”ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து பாரிய கூட்டணி அமைக்க வேண்டும். அப்படியில்லாமல் தேர்தலில் இறங்கி பயனில்லை” எனவும் அவர் கூறினார்.
இதேவேளை, மொட்டுக் கட்சியிலிருந்து வந்தவர்கள் போதிய வாக்குளைக் கொண்டு வரவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். முஷாரப்பும் கலந்து கொண்டார்.