இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா பலி: உறுதிப்படுத்தியது அந்த அமைப்பு
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ருல்லா கொல்லப்பட்டார் என, அந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ருல்லா நேற்று வெள்ளிக்கிழமை இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்திருந்த நிலையில், அதனை ஹிஸ்புல்லா அமைப்பும் உறுதி செய்துள்ளது.
லெபனானில் நேற்று வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து 140 க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது. இதில், பெய்ரூட் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு அடியிலுள்ள இலக்குகளும் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெய்ரூட் மீது இஸ்ரேல் அண்மையில் நடத்திய தாக்குதல்களின் போது, மக்கள் தொகை கொண்ட பல குடியிருப்பு கட்டிடங்கள் தரை மட்டமாகியது. இந்தத் தாக்குதல்களின் போது, பதுங்கு குழிகளை உடைக்கும் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இடைவிடாத இஸ்ரேலிய குண்டுவீச்சு ஆயிரக்கணக்கான மக்களை தங்கள் வீடுகளை விட்டு பெய்ரூட்டின் தெருக்களில் நிறுத்தியுள்ளது.
தொடர்பான செய்தி: ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ருல்லா கொல்லப்பட்டு விட்டார் என, இஸ்ரேல் அறிவிப்பு