பதில் பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்: ‘கொன்ஸ்டபிள்’ ஆக இருந்து, உச்சம் தொட்ட முதல் நபர்
பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பு அதிகாரத்தின் கீழ், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை பதில் பொலிஸ் மா அதிபராக, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (27) ஜனாதிபதி செயலகத்தில் பதில் பொலிஸ்மா அதிபரிடம் நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார்.
இந்த நியமனத்துக்கு முன்னர், பிரியந்த வீரசூரிய வடமத்திய மாகாணதுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக பணியாற்றினார்.
36 வருட சேவை அனுபவத்தைக் கொண்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, 158 வருட பொலிஸ் சேவை வரலாற்றில் பொலிஸ் கொன்ஸ்டபிள் பதவியில் இருந்து பொலிஸ் மா அதிபர் வரை உயர்ந்த முதல் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டதாரியான இவர், இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டத்தரணியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் உதவி பொலிஸ் அத்தியட்சகரானார்.
மேலும் மனித வள முகாமைத்துவத்தில் – வியாபார நிர்வாக இளங்கலை பட்டமும் பெற்றுள்ளார்.
குற்றவியல் மற்றும் போக்குவரத்து மேற்பார்வை பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, கிழக்கு திமோர் மற்றும் ஹைட்டியில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளில் பங்குபற்றியுள்ளார்.