அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றார்

🕔 September 23, 2024

லங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று (23) பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவியேற்றார்.

பதவியேற்பு நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

56 வயதுடைய அனுர குமார திசாநாயக்க நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் 57 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார்.

ஜே.வி.பி எனும் மக்கள் விடுதலை முன்னணியில் தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த அனுர, 1995 இல் அதன் மத்திய செயற்குழுவில் அங்கம் வகித்தார். இவரின் நாடாளுமன்ற பயணம் 2001 இல் ஆரம்பித்தது.

2004 மற்றும் 2005 க்கு இடையில், அவர் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்தில் விவசாயம், கால்நடைகள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக பணியாற்றினார்.

2014 இல், சோமவன்ச அமரசிங்கவுக்குப் பிறகு அனுர குமார திஸாநாயக்க ஜே.வி.பி.யின் தலைவராக பதவியேற்றார்,

அனுராதபுரத்திலுள்ள தம்புத்தேகன மத்திய கல்லூரியின் மாணவரான அனுர குமார திஸாநாயக்க, களனிப் பல்கலைக்கழகத்தில் பௌதீகவியலில் பட்டம் பெற்றவர்.

சமூக நீதி, இறையாண்மை மற்றும் வெளிப்படையான நிர்வாகத்திற்காக வாதிடும் அனுர குமார திசாநாயக்க, ஊழல் மற்றும் தொழிலாளர் உரிமைகள் போன்ற பிரச்சினைகளில் நீண்ட காலமாக ஒரு முக்கிய குரலாக இருந்து வருகிறார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்