மஹிந்தவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீதும், பணச் சலவைக் குற்றச்சாட்டு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மூவரின் நிதி நடவடிக்கைகள் தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, 79 வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் முகாமையாளர்களுக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களான கப்டன் திஸ்ஸ விமலசேன, தமித் கோமின் ரணசிங்க மற்றும் வன்னியாராச்சி நெவில்லே ஆகியோரின் நிதி நடவடிக்கை தொடர்பிலேயே அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி மூலவரும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களினூடாக வைப்புச் செய்த பணம் மற்றும் அவற்றினூடாகக் கொள்வனவு செய்த சொத்துக்கள் தொடர்பாக இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளது.
குறிதத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மூவரும் பணச் சலவையில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டு தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணையின் நிதித்தம், மேற்படி தகவல் தேவைப்படுவதாகவும், எனவே அத் தகவல்களை வழங்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிடுமாறும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றினை வேண்டியிருந்தனர்.
ஊழலுக்கு எதிரான அமைப்பு மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில், மேற்படி மூவருக்கும் எதிரான விசாரணையினை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.
மேற்படி மூவரில் ஒருவரான கப்டன் திஸ்ஸ என்பவர், கடந்த ஆட்சியில் பல்வேறு கொலைகளுடன் தொடர்புபட்டவர் எனக் கூறப்படுகிறது.
குறிப்பாக, பிரபல ரக்பி வீரர் வசிம் தாஜுத்தீன் கொலையின் முக்கிய சூத்திதாரியாக கட்டன் திஸ்ஸ கருதப்படுகின்றார்.