சஜித்துக்கு ஆதரவளிக்கும் மு.காங்கிரஸின் தீர்மானம்: அம்பாறை மாவட்ட எம்.பிகள் ரணிலுக்கு ஆதரவளித்தால் நிலை என்ன?
– மரைக்கார் –
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதென – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் மேற்கொண்டுள்ள போதிலும், அந்தக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவார்களா என்கிற கேள்வி – சமூக ஊடகங்களில் எழுப்பப்படுகிறது.
முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் நேற்று (04) கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் அதன் தலைவர் ரஊப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற போது, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் முடிவு எட்டப்பட்டது.
குறித்த கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் உள்ளிட்ட 05 நாடாளுமன்ற உறுப்பினர்களில் – அலிசாஹிர் மௌலானா மட்டும் கலந்து கொள்ளவில்லை.
இருந்தபோதிலும் கட்சியின் இந்த முடிவுக்கு – அதன் அம்பாறை மாவட்ட உறுப்பினர்கள் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் போன்றோர் கட்டுப்படுவார்களா எனும் சந்தேகங்கள் பரவலாக எழுந்துள்ளன.
குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அண்மைக்காலமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக – பொது மேடைகளில் தெரிவித்து வரும் கருத்துகளைக் கொண்டு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் – ரணில் விக்ரமசிங்கவுக்கே அவர் ஆதரவளிப்பார் எனும் மனப் பதிவு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
மேலும் அரசாங்கத்திடமிருந்து அபிவிருத்தி பணிகளுக்காக அவர் அண்மைக் காலத்தில் சுமார் 80 கோடி ரூபாய் வரையில் நிதியைப் பெற்றிருந்தார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ரணில் விக்ரமசிங்கவுக்கு – மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் ஆதரவளிப்பார் என சமூக ஊடகங்களில் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
அவ்வாறு நடந்தால் கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மு.காங்கிரஸ் என்ன செய்யும் என்கிற கேள்விகள் பற்றியும் பேசப்படுகின்றன.