மாதந்தம் 2.8 பில்லியன் ரூபாய் நட்டத்தை எதிர்கொண்ட நீர்வழங்கல் சபை தற்போது 6.2 பில்லியன் ரூபாய் லாபம் பெறுகிறது: அமைச்சர் ஜீவன்

🕔 July 18, 2024

மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டமையை அடுத்து, நீர்க் கட்டணக் குறைப்பு குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும், இந்த வார இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் எனவும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நீர் வழங்கல் சபைக்கு இதற்கு முன்னர் மாதாந்தம் 2.8 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டு வந்ததாகவும், தற்போது 6.2 பில்லியன் ரூபாய் லாபத்தை அடைந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்று (17) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்;

”மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தமைக்காக அமைச்சர் கஞ்சன விஜேசேகரவை நாம் பாராட்டுகின்றோம். நீர் விநியோகத் துறையானது மின்சாரக் கட்டணங்களுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது, இதனால் இந்தத் திருத்தம் நீர்க் கட்டணங்களைக் குறைக்கவும் வழிவகுக்கும்.

நீர் இருப்பு பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படுகிறது. மின்சாரக் கட்டணக் குறைப்புடன் இணைந்து நீர் கட்டணத்தையும் குறைக்க நாங்கள் முன்பு உறுதியளித்தோம். தற்போது, ​​அமைச்சு மின்சாரத்தில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், குறைக்கப்பட்ட வட்டி விகிதங்களின் தாக்கத்தை மதிப்பிடுகிறது. இது 26% இலிருந்து 11% ஆக குறைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, டொலர் மாற்று விகிதத்தில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் தண்ணீர் கட்டணங்களில் சாத்தியமான குறைப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறோம். நீர் வழங்கல் சபையினால் வாங்கப்படும் ரசாயனங்களின் விலை டொலர் மாற்று விகிதத்தால் பாதிக்கப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த வார இறுதிக்குள் நீர் கட்டணம் எவ்வளவு குறைக்கப்படவுள்ளது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023 ஜனவரியில் நான் பதவியேற்றபோது, ​​1,000 புதிய தண்ணீர் இணைப்புகளைக் கூட வழங்க முடியாத சவால்களை அமைச்சு எதிர்கொண்டது. மேலும், 800 மில்லியன் அமெரிக்க டொலர் கடணைக் கொண்ட அமைச்சினையும், சுமார் 2.8 பில்லியன் ரூபாய் மாதாந்த நட்டத்தைக் கொண்ட நீர்வழங்கல் சபையினையும் நான் பெற்றேன்.

அப்போதிருந்து, நாங்கள் எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். புதிய நீர் இணைப்புகளின் எண்ணிக்கை 113,000 ஆக அதிகரித்துள்ளது. வரும் வாரங்களில் சுமார் 30,000 இணைப்புகளை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், நீர் வழங்கல் சபையின் மாதாந்த நட்டமான 2.8 பில்லியன் ரூபாவை நாம் வெற்றிகரமாக 6.2 பில்லியன் ரூபா மாதாந்த லாபமாக மாற்றியுள்ளோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்