ஜனாதிபதி தேர்தலை நடத்துவதைத் தடுக்கக் கோரும் மனுவுக்கு எதிராக இடையீட்டு மனுக்கள் தாக்கல்

🕔 July 5, 2024

னாதிபதித் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல்  தள்ளுபடி செய்யுமாறு கோரி, உச்ச நீதிமன்றத்தில்  இடையீட்டு மனுக்கள் சில தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் சோசலிச இளைஞர் சங்கத்தின் எரங்க குணசேகர ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக அனைத்து பல்கலைக்கழக  மாணவர்  ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட குழுவினரும் இடையீட்டு மனுவை சமர்ப்பித்துள்ளனர்.

அரசியலமைப்பின் 19வது திருத்தத்தின் 03வது அத்தியாயத்தின் ஊடாக அரசியலமைப்பின் 30(2)வது சரத்து திருத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய, ஜனாதிபதியின் பதவிக்காலம் 06 வருடங்களில் இருந்து 05 வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய, அரசியலமைப்பின் படி, தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் இந்த வருடத்துடன் முடிவடைவதால், இந்த வருடத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது அவசியமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி – உரிய மனுவை சமர்ப்பிக்கும் போது, தவறான விடயங்களை நீதிமன்றத்தில் முன்வைத்து நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த மனுதாரர் முயற்சித்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மனுதாரர் தனது கோரிக்கையை நியாயப்படுத்த உதவும் எந்த சமர்ப்பணங்களையும் முன்வைக்கத் தவறிவிட்டார் என்றும் இடையீட்டு மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனடிப்படையில், இந்த மனு தொடர்பாக தலையிட்டு சமர்ப்பணங்களை முன்வைக்க தமக்கு அனுமதி வழங்குமாறும், தாங்கள் முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்திற்கொண்டு உரிய மனுவை தள்ளுபடி செய்யுமாறும் இடையீட்டு மனுதாரர்கள் நீதிமன்றத்திடம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடையும் திகதி குறித்து – உச்ச நீதிமன்றம் விளக்கம் அளிக்கும் வரை, தற்போது திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு தொழிலதிபரான சி.டி. லெனவ என்பவரால் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

தொடர்பான செய்தி: ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி மனுத் தாக்கல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்