லஞ்ச விவகாரத்தில் சிக்கிய அக்கரைப்பற்று நீர்ப்பாசனப் பொறியியலாளர்: கதைகளும், கட்டுக் கதைகளும்

🕔 June 20, 2024

– மரைக்கார் –

“நீர்ப்பாசனத் திணைக்களத்தில் கடமையாற்றும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவரை, குற்றச் செயலில் ஈடுபடுகின்றவர்களும் – அதிகாரிகளும் இணைந்து, லஞ்சப்பணத்தை திணித்து கைது செய்தனர்” என்று, தேசிய காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா நேற்று முன்தினம் (18) நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

அதாஉல்லா – அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் எப்போதும் தனது அரசியலுக்காக – தலையைக் கால் என்றும், கால்களை ‘கம்பு’ என்றும் கூறுவார். அதனை நாம் கடந்த காலங்களில் பல தடவை கண்டிருக்கின்றோம்.

கடந்த வாரம் அக்கரைப்பற்றைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவரும், அவரின் சாரதியும் லஞ்சம் பெற்றார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கிணங்க விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை அதாஉல்லா அரசியலாக்கியுள்ளார்.

இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று: குறித்த பொறியியலாளர் அதாஉல்லாவை அனுசரித்து கடமையாற்றியவர். இரண்டாவது: பொறியியலாளருக்கு பணம் கொடுத்து பிடித்துக் கொடுத்தவர், அதாஉல்லாவின் கட்சியில் முன்னர் மிக முக்கிய நபராக இருந்து, தற்போது அவரை விட்டுப் பிரிந்து, அவருக்கு எதிராக அரசியல் செய்து கொண்டிருக்கும் எஸ்.எம். சபீஸின் சகோதரர் என்பதாகும்.

இந்த விடயத்தை வைத்து, சபீஸை அக்கரைப்பற்றில் நாறடித்து, அதனூடாக அவரை அரசியலில் ஓரங்கட்ட வேண்டும் என்பது அதாஉல்லாவின் யோசனையாக இருப்பது போல் தெரிகிறது. சபீஸுடன் அக்கரைப்பற்றில் அரசியல் ரீதியாக மோதிக் கொண்டிருக்கும் வேறு சிலரும், இந்தத் திட்டத்தில் கைகோர்த்துள்ளனர். இதனால்தான் பொறியியலாளர் கைது செய்யப்பட்ட விடயத்தை நாடாளுமன்றம் வரை அதாஉல்லா கொண்டு சென்றுள்ளார்.

சரி, அதாஉல்லா சொல்வது போல் – ‘அரச ஊழியர் ஒருவரின் கையில் பணத்தைத் திணித்து, அந்தப் பணத்தை – அவர் லஞ்சமாகப் பெற்றுக் கொண்டார் எனக் கூறி, அவரை லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளை வைத்து, அநியாயமாகப் பிடிக்கலாமா என்கிற கேள்வி இங்கு முக்கியமானது.

இது ‘குஞ்சுச் சோறு’ ஆக்கி விளையாடும் சிறு குழந்தைகளின் கதைகளுக்கு ஒப்பானதாகும்.

லஞ்சம் மற்றும் லஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் மேலும் சில கட்டுக் கதைகளும் உள்ளன.

கட்டுக்கதை – 01: அரச ஊழியர் ஒருவரின் கையில் திடீரென ஒருவர் பணத்தைத் திணித்து, அதனை லஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளை வைத்துப் பிடிக்கலாம்.

கட்டுக்கதை – 02: பணம் மறைந்து வைக்கப்பட்ட ஒரு பார்சலை, அரச ஊழியர் ஒருவரிடம் கொண்டு சென்று, உங்களுக்கு ஒரு பார்சல் வந்துள்ளது என்று பொய்கூறி, அவர் கையில் அந்தப் பார்சலை ஒப்படைக்கும் போது – லஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளைக் கொண்டு, அந்த அரச ஊழியரைக் கைது செய்யலாம்.

கட்டுக்கதை – 03: ஓர் அரச அதிகாரிக்குத் தெரியாமல் அவரின் சாரதியிடமோ அல்லது உதவியாளரிடமோ பணத்தை அல்லது பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பார்சலை, குறித்த அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு கூறி – கொடுக்கும் போது, அவரையும் அதிகாரியையும் லஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளைக் கொண்டு பிடிக்க முடியும்.

இப்படி – ஏராளமான கட்டுக்கதைகள் உள்ளன.

“அரச ஊழியர் ஒருவர் என்னிடம் லஞ்சம் கோருகிறார்” என – லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் நாம் முறையீடு செய்தவுடன், அந்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் உடனே வந்து, லஞ்சம் கேட்டவருக்குப் பணத்தைக் கொடுக்க வைத்து, அதனைப் பெறும் போது கைது செய்வதில்லை.

லஞ்சம் கோரும் ஓர் அரச ஊழியரைக் கைது செய்வதற்கு – சில நாட்களுக்கு முன்னராகவே, கொழும்பிலிருந்து லஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் குறித்த பிரதேசத்துக்கு ஒரு குழுவாக வந்து விடுவார்கள். பின்னர் லஞ்சம் கோரியவரிடம் முறைப்பாட்டாளரை பேச வைப்பார்கள். அவ்வாறான உரையாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு சான்றுகளாக சேகரிக்கப்படும். மட்டுமன்றி வேறு சான்றுகளைப் பெற்றுக் கொள்ள முடிந்தால் அவற்றினையும் அதிகாரிகள் சேகரிப்பார்கள். இப்படி வலுவான சான்றுகள் பெற்றுக் கொள்ளப்பட்ட பிறகே, அவர்கள் கொண்டு வரும் பணத்தை, முறைப்பாட்டாளர் மூலம் கொடுத்து – லஞ்சம் கோரியவரை அதிகாரிகள் கைது செய்வார்கள்.

2020ஆம் ஆண்டு அப்போதைய ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் – லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டதையும், எவ்வாறு அவர்கள் சிக்கனார்கள் என்பதையும் ‘புதிது’ செய்தித்தளம் – களத்தில் நின்று செய்தியாக்கியது. பிரதேச செயலாளர் கோரிய லஞ்சப் பணத்தை – உதவித் திட்டமிடல் பணிப்பாளர் பெற்றுக் கொண்ட போதுதான், அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அதன் முழு விபரத்தை இங்கு அழுத்துவதன் மூலம் படிக்கலாம்

எனவே, ‘அக்கரைப்பற்றைச் சேர்ந்த நீர்ப்பாசன பொறியியலாளரின் சாரதியினுடைய கைகளில் காசைக் கொண்டு போய் திணித்து விட்டு, பொறியிலாளரையும் அவரின் சாரதியையும் – லஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் அநியாயமாகக் கைது செய்துள்ளனர்’ என்று சொல்வதும் எழுதுவதும், அந்த ஆணைக்குழுவை அவமதிப்பதாகவே அமையும்.

லஞ்சம் என்பது இலங்கையில் ஒரு புற்றுநோய் போல் வளர்ந்து நிற்கிறது. ஆனால் லஞ்ச, ஊழல் மோசடிகளில் ஈடுபடுகின்றவர்களை – சட்டத்தின் முன்பாக பிடித்துக் கொடுப்பதற்கு அநேகமானோர் முன்வருவதில்லை. அரச அதிகாரிகளுக்கு லஞ்சத்தைக் கொடுத்து விட்டு, மூக்கால் அழுது திரியும் பல கொந்தராத்துக்காரர்களை நாம் கண்டுள்ளோம். லஞ்சத்தைக் கொடுத்து விட்டு – வெளியில் வந்து திட்டுவதையும் கேட்டிருக்கின்றோம். ஆனாலும் தம்மிடம் லஞ்சம் பெறுகின்றவர்களை அவர்கள் பிடித்துக் கொடுக்க தயாராக இல்லை. அதற்கு ஆயிரத்தெட்டு காரணங்களை அவர்கள் கூறுவார்கள்.

ஒரு திருடன் பிடிபடும் போது, அந்தத் திருடன் நமக்கு வேண்டியவராக இருந்தால் – நாம் கூறும் நியாயம் ஒரு மாதிரியும், அந்தத் திருடன் நமது எதிரியாக இருந்தால் நமது நியாயம் வேறு மாதிரியும் இருக்கக் கூடாது.

அப்படி, ஒரே விடயத்தில் இரட்டை நிலைப்பாடுகளை எடுப்பவர்கள் – அந்தத் திருடனை விடவும் மோசமானவர்களாகவே இருப்பார்கள்.

தொடர்பான செய்தி: லஞ்சம் பெற முயற்சித்த போது சிக்கிய, நீர்ப்பாசன திணைக்களத்தின் அக்கரைப்பற்று பிராந்திய பொறியியலாளர் மற்றும் சாரதிக்கு விளக்க மறியல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்