இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க கூட்டணி வெற்றி: மூன்றாவது தடவையாக பிரதமராகிறார் மோடி
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி பெரும்பான்மை இடங்களை வென்றுள்ளது. 543 உறுப்புரிமைகளைக் கொண்ட இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தில் ஆட்சியமைப்பதற்கு 272 தொகுதிகளைப் பெற்றிருந்தால் போதுமானதாகும்.
இந்த நிலையில் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி 234 தொகுதிகளையும், ஏனைய அணிகள் 17 இடங்களையும் வென்றுள்ளன.
இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் திகதி தொடங்கி, ஜூன் 01ஆம் திகதி வரை மொத்தம் 07 கட்டங்களாக நடைபெற்றது.
இதற்காக 55 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
இதனையடுத்து, இன்றையை தினம் (04) வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
இந்தத் தேர்தலில் 97 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றனர். இவர்களில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 47.15 கோடியாகும்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை மக்களவை எனும் இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெறும்.
தற்போதைய நாடாளுமன்ற முடிவுகளை அடுத்து, நரேந்திர மோடி மூன்றாவது தடவையாக பிரதமராகின்றமை குறிப்பிடத்தக்கது.