பிரதேச வாதத்துக்கு ‘மருந்து’ கட்டிய அக்கரைப்பற்று மக்கள்: குப்புற விழுந்தது அரசியல் கும்பல்

🕔 June 3, 2024
டொக்டர் ஜவாஹிர் கடமையைப் பொறுப்பெடுத்தார்

– மரைக்கார் –

க்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகராக நியமனம் பெற்ற அட்டாளைச்சேனையைச் சேர்ந்த டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் – கடமையைப் பொறுப்பேற்பதற்கு முன்னர், அக்கரைப்பறிலுள்ள அரசியல்வாதியொருவருக்கு ஆதரவான சிறு குழுவினர் இன்றைய தினம் (03) வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

தேசிய காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏ.எல்.எம். அதாஉல்லாவின் சிபாரிசில் நியமிக்கப்பட்ட, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

நேற்றைய தினம் (02) ஊடக சந்திப்பொன்றை நடத்திய அபிவிருத்திக் குழுவினர், இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் – ஊர் மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் குறித்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 30 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை கணக்கிலும் எடுக்கவில்லை.

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த டொக்டர் ஜவாஹிர் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் 2016 தொடக்கம் 2021 வரை, வைத்திய அத்தியட்சகராகப் பணியாற்றியபோது, வைத்தியசாலைக்குள் அரசியலை அனுமதிக்க மறுத்தார், அரசியல்வாதிகளின் சொல்லுக்கு ஆட்டம் போடாமல் விலகியிருந்தார். இதனால், அக்கரைப்பற்று நாடாளுமன்ற உறுப்பினர் அதாஉல்லாவின் கோபத்துக்கு ஆளானார்.

இதேவேளை, வைத்தியசாலை நிர்வாகத்திலும், மக்களுக்கு கடமை செய்ய வேண்டுமென்பதிலும் இறுக்கமாக ஜவாஹிர் நடந்து கொண்டார். இது அங்கு தத்தமது தொழில்களில் அலட்சியமாகவும் மோசடியாகவும் நடப்பவர்களுக்கு கடும் தொந்தரவை ஏற்படுத்தியது.

இதனையடுத்து டொக்டர் ஜவாஹிருக்கு எதிராக பல்வேறு பொய் குற்றச்சாட்டுகள் புனையப்பட்டதோடு, அவரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான சதிகளும் மேற்கொள்ளப்பட்டன. டொக்டர் ஜவாஹிருக்கு எதிராக பிரதேச வாதத்தை, அதாஉல்லாவின் ஆட்கள் கையில் எடுத்தனர்.

இந்த பின்னணியில்தான், 2021ஆம் ஆண்டு – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இருந்து – டொக்டர் ஜவாஹிர் மாற்றலாகி, கிண்ணியா தள வைத்தியசாலைக்கு அத்தியட்சகராகச் சென்றார். அங்கு அவரின் நிர்வாகத்தின் கீழ், அந்த வைத்தியசாலை பல்வேறு அபிவிருத்திகளையும் அடைவுகளையும் கண்டது.

இந்த நிலையில் மீண்டும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு – டொக்டர் ஜவாஹிர் நியமிக்கப்பட்டார். நாடு முழுவதிலுமுள்ள வைத்தியசாலைகளுக்கு பொறுப்பதிகாரிகளை நியமிப்பதற்காக நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைகளில், அதிக புள்ளிகளைப் பெற்ற 63 பேருக்கு பொதுச் சேவை ஆணைக்குழு – நியமனங்களை வழங்கியது. அதற்கிணங்க, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அத்தியட்சகராக டொக்டர் ஜவாஹிர் நியமிக்கப்பட்டார்.

இதனால் கலங்கிப் போன அக்கரைப்பற்றிலுள்ள அதாஉல்லாவின் அரசியல் குழுவினரும், தொழிலில் அலட்சியமாக நடந்து கொள்வோரும், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த டொக்டர் ஜவாஹிர் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு வரக் கூடாது என்கிற கோசத்தை மீண்டும் கையில் எடுத்தனர். அதாஉல்லா எம்.பியின் சிபாரிசில் நியமிக்கப்பட்டுள்ள ‘வைத்தியசாலை அபிவிருத்திக் குழு’வினர் இதற்காக களத்தில் இறக்கப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக டொக்டர் ஜவாஹிருக்கு எதிராக ‘வைத்தியசாலையைப் பாதுகாப்போம்’ என்கிற கோசத்தை முன்வைத்து – இன்று காலை ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. இதில் 30 பேர் அளவிலானோர் மட்டுமே கலந்து கொண்டனர்.

வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய அத்தியட்சகரை – தாம் ஒருபோதும் எதிர்க்கப்போவதில்லை என்று, நேற்றைய தினம் அக்கரைப்பற்று ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் கலாநிதி சித்தீக் ஹாபிஸ் விடுத்த அறிக்கை மக்களை தெளிவுபடுத்தியது. அக்கரைப்பற்றைச் சேர்ந்த பலர் சமூக ஊடகங்களில், டொக்டர் ஜவாஹிருக்கு எதிரான அரசியல் கூத்தை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரின் கேவலமான அரசியலை அக்கரைப்பற்று மக்களும் புரிந்து கொண்டனர். இதனால் பிரதேச வாதத்தைக் கையில் எடுத்து, டொக்டர் ஜவாஹிருக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளாமல், அதனைத் தோற்கடித்தனர்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறு குழுவினர் வெட்கத்துடன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் இன்று காலை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குச் சென்ற டொக்டர் ஐ.எம். ஜவாஹிர், வைத்திய அத்தியட்சகராக – தனது கடமையைப் பொறுப்பேற்றார்.

இந்த நிகழ்வில், அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டு, டொக்டர் ஜவாஹிருக்கு தமது ஆதரவுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

மக்கள் உசாராக இருக்கின்றார்கள். அரசியலுக்காக பிரதேச வாதம் பேசி – வயிறு வளர்ப்பவர்கள் குறித்து மக்கள் தெளிவாகவும் உள்ளார்கள் என்பதை, இன்றைய நிகழ்வுகள் காட்டி நிற்கின்றன.

கடமையைப் பொறுப்பெடுத்த போது, வாழ்த்து தெரிவிக்க திரண்டிருந்தோர்
இன்று காலை நடந்த ஆர்ப்பாட்டம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்