பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கப் போராட்டம்: அரசுக்கு 150 மில்லியன் ரூபாய் நஷ்டம்

🕔 June 1, 2024

ல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தினால், அரசுக்கு சுமார்150 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களுடன்- அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்த ராஜங்க அமைச்சர், தொழிற் சங்கங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் கூறினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

“பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தற்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர், இது துரதிர்ஷ்டவசமானது, இது மாணவர்களின் எதிர்கால சந்ததியினரை பாதிக்கிறது. இந்த வேலைநிறுத்தத்தால் நேரடியாக சுமார் கோடி நிதி இழப்பு ஏற்படுகிறது. 150 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதோடு, 1.8 மில்லியன் மனித மணிநேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது அரசு இனியும் நேரத்தை வீணடிக்கக் கூடாது” என்றார்.

“சம்பள உயர்வு உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அடுத்த ஆறு மாதங்களுக்கு 1.1 பில்லியன் ரூபாய் தேவைப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து நான் அறிக்கை கோரியுள்ளேன். மேலும் தீர்வு காண – நிதி அமைச்சு மற்றும் திறைசேரியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என்றும் சுரேன் ராகவன் மேலும் கூறினார்.

தற்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத் தலைவர்களுடனான கலந்துரையாடல் – எதிர்வரும் திங்கட்கிழமை திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்