விஜேதாச ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிப்பு

🕔 May 27, 2024

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுக்கும் வகையில் அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் முதலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த மனு, பின்னர் நீதிமன்ற இலக்கம் 07க்கு மாற்றப்பட்டது.

இதன்போது பிரதிவாதிகள் தமது ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு மேலும் கால அவகாசம் வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், விஜயதாச ராஜபக்ஷவிற்கு எதிரான தடை உத்தரவை நீடிக்குமாறு 07ஆம் இலக்கம் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இதன்படி, விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான தடை உத்தரவு 2024 ஜூன் 27 வரை நீடிக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க எம்.பி தாக்கல் செய்த மனுவை – பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட கொழும்பு மாவட்ட நீதிமன்றம், விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக ஏற்கனவே தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அணிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான அணிக்கும் இடையிலான மோதலை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுத்து நிறுத்திய நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, விஜயதாச ராஜபக்ஷ மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் அந்தந்த தரப்பினரால் பதில் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.

அதன் பின்னர், புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் விஜயதாச ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக செயற்படுவதைத் தடுத்து – பல நீதிமன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

இருந்த போதிலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேன ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கட்சியின் புதிய தலைவராக விஜயதாச ராஜபக்ஷவை நியமிக்க செயற்குழு ஏகமனதாக வாக்களித்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்