ரஃபாவில் இடம்பெயர்ந்தோர் முகாம் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்; 40 பேர் பலி: உயிருடன் பலர் எரிந்ததாக சாட்சிகள் தெரிவிப்பு

🕔 May 27, 2024

காஸாவின் தெற்குப் பகுதியில் உள்ள ரஃபாவுக்கு அருகில், இடம்பெயர்ந்த பலஸ்தீனியர்கள் தங்கியிருந்த முகாம் மீது – இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாக காஸா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“தெற்கு காசா பகுதியில் உள்ள ரஃபா நகரின் வடமேற்கே அகதிகள் கூடாரங்களில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ராணுவம் நடத்திய படுகொலையில் 40 பேர இறந்துள்ளனர். 65 பேர் காயமடைந்துள்ளனர்” என்று சிவில் பாதுகாப்பு முகவரகத்தின் சிரேஷ்ட அதிகாரி முகமது அல்-முகாயிர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்குகுள்ளா முகாம் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பான வலயத்தில் இருந்தாகவும், ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 8.45 மணியளவில் குறைந்தபட்சம் 08 ஏவுகணைகள் முகாமைத் தாக்கின எனவும் தாக்குதலைக் கண்டோர் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்களில் பலர் தல் அஸ்-சுல்தான் பகுதியிலுள்ள – அவர்களின் கூடாரங்களுக்குள் ‘உயிருடன் எரிந்தனர்’ என, பலஸ்தீன செம்பிறையை மேற்கோள் காட்டி ‘வபா’ (Wafa) செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ரஃபாவில் தாக்குதலை நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் (ICJ) உத்தரவிட்ட போதிலும் இஸ்ரேலிய படைகள் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகின்றன.

இதேவேளை, தமது விமானப்படை – ரஃபாவில் உள்ள ஹமாஸ் வளாகத்தை தாக்கியதாகவும், துல்லியமான உளவுத்துறையின் அடிப்படையில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.

இத்தாக்குதலில் மேற்குக் கரைக்கான ஹமாஸின் தலைமை அதிகாரியும், இஸ்ரேலியர்கள் மீதான கொடிய தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்த மற்றொரு மூத்த அதிகாரியும் கொல்லப்பட்னர் எனவும் இஸ்ரேல் மேலும் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்