சரத்பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினராக நாளை சத்தியப் பிரமாணம்
ஜனநாயக கட்சித் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக நாளை செவ்வாய்கிழமை சபாநாயகர் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார் என்று ஐ.தே.கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மறைந்த காணியமைச்சர் எம்.கே.ஏ.டி.டிஸ். குணவர்தனவின் வெற்றிடத்துக்கு, ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சரத்பொன்சேகா நியமிக்கப்படவுள்ளார்.
ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக சரத் பொன்சேகாவை நியமிப்பது தொடர்பில் அந்தக் கட்சியின் செயற்குழு இன்று கூடியுள்ளது.
இதேவேளை, இந்த நியமனம் தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கு இன்று அறிவிக்கப்படும் என்றும், இன்று இரவு இது தொடர்பான அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் அச்சாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தேர்தல் ஆணையாளருக்கு மனு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ உள்ளிட்ட ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும், சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்கு எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.