அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் மீனவர்களை சந்திக்கும் மு.கா தலைவர்: ஒலுவில் துறைமுகத்தின் பெயரால் மக்களை ஏமாற்றும் மற்றொரு கூத்து

🕔 April 21, 2024

மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் – மீனவர்களை சந்திக்கவுள்ள கூட்டமொன்று அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இன்று (21) மாலை 4.00 மணியளவில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ளது.

ஒலுவில் துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா உதவவுள்ளதாகவும், அது தொடர்பில் இலங்கைக்கான இந்தியத் தூதுவரை மு.காங்கிரஸ் தரப்பு அழைத்து வரவுள்ளதாவும், அதுபற்றி மீனவ சமூகத்தினருடன் பேசுவதற்காகவே இன்றைய கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அறியக் கிடைக்கிறது.

எது எவ்வாறாயினும் – மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் – அவரின் அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னிறுத்தி, வழமைபோல் அபிவிருத்தி என்கிற நாடகத்தை அரங்கேற்றி – மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகவே இன்று ஒழுங்குசெய்யப்பட்டுள்ள கூட்டத்தைப் பார்க்க முடிவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

மு.காங்கிரஸ் தலைவர் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அதிகாரம்மிக்க அமைச்சராக இருந்தபோது – அபிவிருத்தி செய்யாத ஒலுவில் துறைமுகத்தை, தற்போது தேர்தலொன்று நெருங்கும் காலகட்டத்தில் அபிவிருத்தி செய்யப்போவதாக கூறுவது அரசியல் ஏமாற்று வேலையாகும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மறுபுறமாக, மு.காங்கிரஸின் அரசியல் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் கூட்டமொன்றை நடத்துவதற்கு அரச நிறுவனமொன்று பயன்படுத்தப்படுவது எவ்வகையிலும் நியாயமற்றதாகும். அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரிகளின் தகவலின் படி, இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.

இலங்கை முஸ்லிம்கள் மீது வரலாற்றுப் பழியினை ஏற்படுத்திய ஈஸ்டர் தாக்குதலை, இந்தியாவின் புலனாய்வுப் பிரிவினரே பிரதான மூளையாகச் செயற்பட்டு நடத்தியதாக, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில், இந்தியத் தூதுவரை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்துக்கு அழைத்து வரவுள்ளதாகக் கூறப்படுகின்றமை கவனிப்புக்குரியது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்