இலங்கை வேடுவர்கள், இந்தியாவிலுள்ள 5 பழங்குடியினருடன் மரபணு பிணைப்பைக் கொண்டுள்ளனர்: ஆய்வில் தெரிவிப்பு

🕔 April 21, 2024

லங்கையின் ஆதிக்குடிகளான வேடுவ மக்கள், இந்தியாவிலுள்ள ஐந்து பழங்குடி இன மக்களுடன் நெருங்கிய மரபணு பிணைப்புகளை கொண்டுள்ளதாக ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒடிசாவில் உள்ள சந்தால் மற்றும் ஜுவாங் பழங்குடியினருடனும், நெருங்கிய தொடர்பினை இவர்கள் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள இருளர், பணியா மற்றும் பள்ளர் போன்ற திராவிட மொழி பேசும் பழங்குடியினருடனும் இலங்கையின் வேடுவர்கள் வலுவான மரபணு ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்வதாக இந்திய மற்றும் இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது.

மைட்டோகாண்ட்ரியன் என்ற அறிவியல் சஞ்சிகையில் – இந்த வாரம் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையொன்றில், இலங்கையின் சிங்கள அல்லது தமிழ் மக்களை விடவும், இந்த ஐந்து பழங்குடியினருடன் – இலங்கை வேடுவ இனத்தவருக்கு அதிக மரபணு ஒற்றுமை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நவீன மனிதர்கள் கடந்த 30 ஆயிரம் ஆண்டுகளாக இலங்கையை ஆக்கிரமித்துள்ளனர்.

வேடுவர்களான பழங்குடி மக்கள் இலங்கையின் ஆரம்பகால குடிமக்களின் நேரடி சந்ததியினர் என்று நம்பப்படுகிறது.

வேடுவர்கள் – அவர்களின் தனித்துவமான மொழி மற்றும் கலாசாரத்தின் காரணமாக, மானுடவியலாளர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகளைக் கவர்ந்துள்ளதாக, ஹைதராபாத்தில் உள்ள செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் விஞ்ஞானியும் ஆய்வு ஒத்துழைப்பாளருமான குமாரசாமி தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வு – வேடுவர்களின் மரபணு தோற்றம் மற்றும் இந்திய மக்களுடனான தொடர்புகளை வெளிப்படுத்துகிறது.

வேடுவர்களின் மூலமொழி தனித்துவமானது. அது அறியப்பட்ட எந்த மொழியுடனும் தொடர்பில்லாததாக உள்ளது.

தொடர்பான கட்டுரை: தேன் எடுக்கும் தொழில்; கசப்பான வாழ்க்கை: தமிழர்களால் புறக்கணிக்கப்படும் தமிழ் பேசும் வேடுவர்கள்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்