ஈரான் மீது இஸ்ரேல் இன்று அதிகாலை தாக்குதல்: உறுதி செய்தது அமெரிக்கா

🕔 April 19, 2024

ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 04 மணிக்கு ஈரானின் இஸ்ஃபஹான் நகருக்கு அருகில் மூன்று சிறிய அறியப்படாத பறக்கும் பொருள்கள் இடைமறிக்கப்பட்டன என, ஈரான் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், ஈரானின் இஸ்ஃபஹான் மாகாண வானத்தில் மூன்று ட்ரோன்கள் காணப்பட்டன என்றும், அவை வான் பாதுகாப்பு அமைப்புகளால், வானத்தில் வைத்து அழிக்கப்பட்டன என்றும் ஈரான் அரச தொலைக்காட்சி தெரித்துள்ளது.

குறித்த ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட பின்னர், காலையில் இஸ்ஃபஹான் மத்திய நகரத்தில் மக்கள் வழமையான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமையினையும், வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுகின்றமையினையும் அங்குள்ள தொலைக்காட்சியொன்று நேரடியாக காட்டியது.

குறித்த ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இடத்துக்கு அருகில் ராணுவ விமானப் படைத்தளம் உள்ளது. அங்கு F-14 ‘டொம்கெற்’ போர் விமானத்தின் பல படைகள் உள்ளன.

ட்ரோன்கள் வானில் காணப்பட்டதை அடுத்து, அந்தப் பகுதியில் சைரன் ஒலித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 13ஆம் திகதி இஸ்ரேல் மீது 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியிருந்தது.

சிரியாவிலுள்ள ஈரான் தூதரகத்தின் மீது ஏப்ரல் 01ஆம் திகதியன்று இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் – அந்தத் தாக்குதலை நடத்தியது.

தொடர்பான செய்தி: இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல்; பதில் தாக்குதலுக்கு அமெரிக்கா உதவாது: பைடன் தெரிவிப்பு

Comments