புறக்கோட்டையிலுள்ள அனுமதியற்ற கடைகள் நிர்மாணத்தின் பின்னணியில் கடத்தல்காரர்கள் உள்ளனர்

🕔 April 18, 2024

– முனீரா அபூபக்கர் –

கொழும்பு புறக்கோட்டையில் அனுமதியற்ற விதத்தில் கடைகளை நிர்மாணிப்பதன் பின்னணியில் – ஒழுங்கமைக்கப்பட்ட கடத்தல்காரர்கள் குழுவொன்று இருப்பதாக, கொழும்பு மாநகர சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை வெளிப்படுத்தியுள்ளது.

கொழும்பு மிதக்கும் சந்தைக்கு முன்பாக நேற்று இடிக்கப்பட்டுள்ள 21 கடைகளும் கடத்தல்காரர்களால் கட்டப்பட்ட சட்டவிரோத கட்டுமானங்கள் என கொழும்பு மாநகரசபையின் நகர அழகுபடுத்தல் திட்ட இணைப்பாளர் பொறியியலாளர் குமுது போகஹவத்த தெரிவித்தார்.

மேலும் கடத்தல்காரர்கள் கடைகளை தினசரி வாடகைக்கு – வேறு நபர்களுக்கு குத்தகைக்கு விட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். சட்டவிரோத கட்டுமானம் குறித்து முதன்முறையாக முறைப்பாடு கிடைத்தால் அதனை அகற்றுவதற்கு மாநகர சபை நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் கூறினார்.

எனவே இவ்வாறான ஒழுங்கமைக்கப்பட்ட கடத்தல்காரர்களுக்கு இரையாகி, பணத்தை வீணடிக்க வேண்டாம் என கொழும்பு மாநகர சபையும் நகர அபிவிருத்தி அதிகார சபையும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.

அனுமதி பெறாத கடைகளை அகற்றும் முன், கடை உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதல் அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் 20ம் திகதி நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் வெளியிடப்பட்டது. அதனையடுத்து, கடந்த ஜனவரி 2ஆம் திகதி அனைத்து கடை உரிமையாளர்களுக்கும் 14 நாட்களுக்குள் கடைகளை அகற்றுமாறு கொழும்பு மாநகர சபை எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளது. பல தடவைக இந்த கடைகளின் உரிமையாளர்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் கொழும்பு மாநகர சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளன.

ஆனால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கடைகள் அகற்றப்படாததால் கடந்த 16, 17 ஆகிய இரு தினங்களில், இந்த அனுமதியற்ற கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் இந்த கடைகளை அவற்றிலிருந்து அகற்றுவதற்கு நகர சபையினால் செலவிடப்படும் பணத்தை மீளப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கொழும்பு மாநகர சபையின் நகர அழகுபடுத்தல் திட்ட இணைப்பாளர் பொறியியலாளர் குமுது போகஹவத்த தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்