ஆலம்குளம் பாடசாலையை தேசியத்துக்கு கொண்டு சென்றுள்ள அனபா: அதிகாரிகள், அரசியல்வாதிகள் கொஞ்சம் கவனியுங்கள்

🕔 April 4, 2024

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஆலம்குளம் பகுதியில் அமைந்திருக்கும் றஹுமானியா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி எம். அனபா என்பவர், தேசிய மாணவர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, ‘பௌதீக வள அபிவிருத்தி மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்’ ஆகவும் தெரிவு நியமிக்கப்பட்டுள்ளார். இது பலருக்கு மகிழ்க்சியையும் கூடவே ஆச்சரியத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் 26ம் திகதி ஜனாதிபதி செயலக கட்டடத் தொகுதியில், மாணவர் நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு இடம்பெற்றது.

இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் இரண்டு மாணவர்கள் மட்டுமே – தேசிய மாணவர் நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்பட்டனர். அதில் அனபா ஒருவர். மற்றையவர் பாலமுனை மின்ஹாஜ் வித்தியாலயத்தின் ஆண் மாணவர்.

அனபா தற்போது தரம் 11இல் படிக்கின்றார். அங்கு 11ஆம் வகுப்பு வரைதான் உள்ளது. உயர்தரம் கற்பதற்காக ஆலம்குளம் பகுதியிலுள்ள மாணவர்கள் – ஆகக்குறைந்தது 10 கிலோமீற்றர வரை பயணிக்க வேண்டும். அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள பின்தங்கிய பாடசாலைகளில் இதுவும் ஒன்று.

அவ்வாறான ஒரு பாடசாலையிலிருந்து, தேசிய மாணவர் நாடாளுமன்றத்துக்கு மாணவியொருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை பாராட்டுக்கும் கவனிப்புக்கும் உரிய விடயமாகும்.

இந்தப்பாடசாலையில் 14 ஆசிரியர்கள் உள்ளனர். பல ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் அங்கு காணப்படுகின்றன. அதேவேளை வளப் பற்றாக்குறைகளும் நிறையவே உள்ளன.

இவ்வாறான பாடசாலையைச் சேர்ந்த மாணவியொருவர், அக்கரைப்பற்று வலயத்திலுள்ள பல முன்னணிப் பாடசாலைகளையெல்லாம் முந்திக் கொண்டு – தேசிய மாணவர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை, சாதாரணமாகக் கடந்து போகும் செய்தியல்ல.

இந்தப் பாடாசலையின் அதிபராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த கே.எல்.எம். முனாஸ் – அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்தப் பாடசாலையை மேலும் முன்னேற்றுவதற்கான ஆர்வத்துடன், அதற்கான பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்.

எனவே, ஆலம்குளம் றஹுமானியா வித்தியாலயத்துக்கு, அனபாவின் மூலம் கிடைத்திருக்கும் வெளிச்சத்தைப் பயன்படுத்தி, அந்தப் பாடசாலை சமூகத்தினர், மென்மேலும் தங்கள் பாடசாலையை வளர்த்தெடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

அதேவேளை, அந்தப் அந்தப் பாடசாலை மீது – அதிகாரிகளும் அரசியல் பிரதிநிதிகளும் அதிக கவனத்தை செலுத்தி, அதனை மென்மேலும் உயர்த்துவதற்கு உதவி செய்ய வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்