புதிய தலைவர்களை உருவாக்குவதற்கு, இப்போதைய தலைவர்கள் அச்சப்படுகின்றனர்: சபீஸ் குற்றச்சாட்டு

🕔 April 1, 2024

மது சமூகத்தின் தலைவர்கள் – தமக்கு அடுத்த படியாக உள்ளவர்களை தலைவர்களாக உருவாக்காமல், அவர்கள் தம்மை மிஞ்சி விடுவார்களோ என்ற அச்சத்தில், ஓரங்கட்டும் விதமாக செயற்படுவது தலைமைத்துவ பண்பாக அமையாது” என கிழக்கின் கேடயம் தலைவர் எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.

ஆனாலும் அம்பாறை மாவடத்திலுள்ள ஆளுமை மிக்க இளைஞர்களை ஒன்று சேர்ந்து – அவர்களிடம் தலைமைப் பண்பை உருவாக்கும் பணியை கிழக்கின் கேடயம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

அக்கரைப்பற்றிலுள்ள எம்.எஸ். லங்கா வளாகத்தில் – நேற்று (31) கிழக்கின் கேடயம் ஏற்பாடுசெய்திருந்த இஃப்தார் நிகழ்வில் கலந்து கொண்ட பெருமளவான மக்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு சபீஸ் தொடர்ந்து உரையாற்றுகையில்;

“முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர் ஜயவர்த்தன, தனக்கு கிழிருந்த ஆளுமை கொண்டோரை அரசியல் தலைவர்களாக உருவாக்கினார். அதே போன்று பெருந்தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் – தனக்கு கிழிருந்தவ பலரை தலைவர்களாக்கினார். அவ்வாறு உருவாக்கப்பட்டவர்களே – இப்போது எமது சமூகத்தினுள் அரசியல் தலைவர்களாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், இப்போதுள்ள தலைவர்கள் – தமது காலத்தின் பின்னர், புதிய தலைமைகளை உருவாக்குவதற்கு முன்வராமை பாரிய குறையாக இருக்கிறது.

தலைவர்களின் பணிகளில் முக்கியமானது – அனைத்துத் துறைகளிலும் தலைவர்களை உருவாக்குவதாகும். ஆனால் தற்காலத்தில் சில அரசியல் தலைவர்கள் – அரசாங்கம் வழங்கும் நிதியை பங்கு வைத்துக் கொண்டு, அதுவே தமது சமூகப் பணி என்வும் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், எமது சமூகத்திலுள்ள இளைஞர்களை ஒன்றிணைத்து, அவர்களிடத்தில் தலைமைத்துவப் பண்புகளை வளர்த்து, எதிர்காலத் தலைவர்களாக அவர்களை உருவாக்கும் அவாவுடன் கிழக்கின் கேடயம் களப்பணி செய்து வருகிறது” என்றார்.

இந்நிகழ்வில் கிழக்கின் கேடயம் ஆலோசகர் எஸ்.எம்.எம். ஹனீபா, பொதுச்செயலாளர் யூ.எல்.என். ஹுதா, தவிசாளர் ஏ.கே.அமீர், அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கிழக்கின் கேடயம் இணைப்பாளர்கள், பொதுமக்கள் என – பலரும் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்