கெஹலியவுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

🕔 March 28, 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை தொடர்ந்தும் ஏப்ரல் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் இன்று வியாழக்கிழமை (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த, மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க, மருத்து வழங்கல் பிரிவின் பணிப்பாளர் கபில விக்கிரமநாயக்க, அதன் பிரதி பணிப்பாளர் துசித சுதர்ஷன, உதவி பணிப்பாளர் தேவசாந்த சொலமன், கணக்காளர் (விநியோகங்கள்) நரேன் தனஞ்சய ஆகியோர் களஞ்சியக் கட்டுப்பாட்டாளர் சுஜித் குமார மற்றும் தரமற்ற மருந்துக் குப்பிகளை வழங்கியதாகக் கூறப்படும் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகியோரும் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

தரமற்ற ஹியுமன் இன்ட்ரவெனஸ் இம்யூனோகுளோபுலின் மருந்துக் குப்பிகளை கொள்வனவு செய்தமைக்கு உடந்தையாக இருந்த குற்றசசாட்டில் முன்னாள் அமைச்சர் கெஹலியவை குற்றப் புலனாய்வு திணைக்களம் (சிஐடி) பெப்ரவரி 02 ஆம் திகதி கைது செய்தது.

சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் சுகாதாரத் துறை தொழிற்சங்கவாதிகளின் அழுத்தத்தின் அடிப்படையில் இந்த கைது நடந்தது. கெஹலிய உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் கவன ஈர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

பெப்ரவரி 29ஆம் திகதியன்று கெஹலிய ரம்புக்வெல்ல சிஐடியால் கைது செய்யப்பட்டதைச் சவாலுக்கு உட்படுத்தி, அவருக்கு 100 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் என, அவரின் சட்டத்தரணிகள் அடிப்படை உரிமை மீறல் வக்கு ஒன்றினை தாக்கல் செய்தனர்.

மார்ச் 14ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் அவரை பிணையில் விடுவிக்க மறுத்ததையடுத்து, கெஹலிய ரம்புக்வெல்ல தனது சட்ட ஆலோசகர்கள் ஊடாக, எந்தவொரு நிபந்தனைகளுக்கும் உட்பட்டு பிணை வழங்குமாறு கோரி – கொழும்பு மேல் நீதிமன்றில் திருத்தப்பட்ட மனுவொன்றை தாக்கல் செய்தார்.

இந்த பிணை மனு மீதான தீர்ப்பு ஏப்ரல் 03ஆம் திகதி வழங்கப்பட உள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்