புறக்கோட்டை மிதக்கும் சந்தை ஜப்பான் நகரமாகிறது

🕔 March 27, 2024

– முனீரா அபூபக்கர் –

புறக்கோட்டை மிதக்கும் சந்தைக்கு (Floating Market) மீண்டும் புத்துயிரளிப்பதற்கு ஜப்பானிய முதலீட்டாளர் ஒருவர் முன் வந்துள்ளார்.

அதற்கான ஆரம்ப புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (27) பத்தரமுல்ல நகர அபிவிருத்தி அதிகாரசபையில் – நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் மற்றும் ஜப்பானிய முதலீட்டாளர் அகிரா ஹிரோஸ் (Akira Hirose) தலைமையில் இடம்பெற்றது.

அதன்படி, புறக்கோட்டை மிதக்கும் சந்தையின் முகாமைத்துவம் மற்றும் செயற்பாடுகள், இந்த ஜப்பானிய முதலீட்டின் மூலம் மேற்கொள்ளப்படும்.

புறக்கோட்டை மிதக்கும் சந்தை வளாகம், முறையாக நிர்வகிக்கப்படவில்லை என கடந்த காலங்களில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பில் அவதானம் செலுத்திய விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இதனை அபிவிருத்தி செய்வதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதியை – அரச தனியார் பங்களிப்பின் கீழ் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

இதற்காக முதலீட்டாளர்களை முன்வருமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு அமையவே ஜப்பானிய முதலீட்டாளர் முன்வந்துள்ளார். இதன்படி மிதக்கும் சந்தை வளாகம் ஜப்பானிய நகரமாகவும் மிதக்கும் சந்தையாகவும் உருவாக்கப்படுகிறது.

இது ஜப்பானிய முதலீட்டாளருக்கு 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்படும். வெளிநாட்டு முதலீட்டாளர்களை குறிவைத்து புறக்கோட்டை மிதக்கும் சந்தை வளாகத்தை சுற்றுலா நகரமாக நிறுவுவதே இதன் நோக்கமாகும். அதன் அபிவிருத்தித் திட்ட காலம் 06 மாதங்கள் ஆகும்.

புறக்கோட்டை மிதக்கும் சந்தை – கொழும்பு புறக்கோட்டை, பஸ்தியன் மாவத்தையில் அமைந்துள்ளது. இது 92 கடைத் தொகுதிகளைக் கொண்டுள்ளதுடன் பேர வாவியில் படகுகளில் பல கடைகளும் நிறுவப்பட்டுள்ளன.

தற்போது அங்கு வியாபாரம் செய்து வரும் கடை உரிமையாளர்களுக்கு எவ்வித அநீதியும் ஏற்படாத வகையில் இதனை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அப்போது அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவின் அடிப்படையில் புறக்கோட்டை மிதக்கும் சந்தை 2014 ஓகஸ்ட் 25 அன்று திறக்கப்பட்டது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்டங்களின்படி, மிதக்கும் வணிக வளாகத்தின் நிர்மாணத்துக்காக செலவிடப்பட்ட தொகை 352 மில்லியன் ரூபாவாகும். 05 வருடங்களில் மொத்த செலவில் 50% சம்பாதிப்பதே இந்த சந்தை வளாகத்தின் முதன்மையான குறிக்கோளாக இருந்தது.

ஆனால் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இந்த மிதக்கும் வர்த்தக நிலையம் அபிவிருத்தி செய்யப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்தது. இங்குள்ள 92 கடைகளில் 80 சதவீத கடைகள் முறையான பராமரிப்பு இல்லாததால் மூடப்பட்டன. அழுகிப்போகும் பலகைகள், முறையற்ற விளக்கு அமைப்பு, பாதுகாப்பின்மை, அசுத்தமான சுற்றுப்புறம், துர்நாற்றம் மற்றும் சட்டவிரோத மற்றும் ஒழுங்குமுறையற்ற செயல்களால், இந்த மிதக்கும் வணிக வளாகம் நாளுக்கு நாள் சீரழிந்து வருகிறது. இதனால், ஏற்கனவே திட்டமிட்டபடி ஐந்தாண்டுகளுக்குள் செலவில் 50% சம்பாதிக்கும் திட்டம் தடைபட்டது.

அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மிதக்கும் சந்தையானது வர்த்தக மையம், வரலாற்று நகரம் மற்றும் ஒரு வணிக நகரம் ஆகிய மூன்று காரணிகளின் அடிப்படையில் கொழும்பு புறக்கோட்டையை அபிவிருத்தி செய்யும் செயற்பாட்டின் படி முழுமையான புனரமைப்புக்கு உட்பட்டு 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட்டது.

அது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் ஆலோசனையின் பிரகாரம் திறக்கப்பட்டது. இதன் புனரமைப்புச் செலவு 25 மில்லியன் ரூபாயாகும்.

புறக்கோட்டை மிதக்கும் சந்தை புத்துயிர் பெற – ஜப்பானிய முதலீட்டாளர்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பின்னர் பேசிய நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத்,

“புறக்கோட்டை மிதக்கும் சந்தை புத்துயிர் பெறுவது குறித்து பல்வேறு முதலீட்டாளர்களுடன் கலந்தரையாடினோம். அதன்படி எமக்கு பொருத்தமான முதலீட்டாளரை தெரிவு செய்து அதை குத்தகைக்கு விடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றோம். இந்த திட்டத்தை செயல்படுத்தும் போது, மிதக்கும் வணிக வளாகத்தில் உள்ள வணிக சமூகம் பாதிக்கப்படாது” என்று தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்