ஈஸ்டர் தினத் தாக்குதலின் சூத்திரதாரி இந்தியா: சிஐடி யிடம் மைத்திரி பரப்பு வாக்குமூலம்

🕔 March 27, 2024

லங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இந்தியாவும் அதன் உளவுத் துறையும் இருந்ததாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (சிஐடி) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார் என்று – உயர் மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தமக்குத் தெரிவித்ததாக ‘தமிழன்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஈஸ்டர் தின தாக்குதலின் சூத்திரதாரி யார் என தனக்குத் தெரியும் என்று, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – அண்மையில் தெரிவித்திருந்தமை தொடர்பில், அவரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் ஒன்றினை பெற்றிருந்தது.

சுமார் 06 மணிநேரம் மைத்திரி வழங்கிய வாக்குமூலத்திலே, மேற்படி விடயத்தை தெரிவித்திருந்ததாக ‘தமிழன்’ பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

மைத்திரி வழங்கிய இந்த வாக்குமூலத்தின் பிரதியை, அன்றைய தினமே சட்ட மா அதிபர் பெற்றுக் கொண்டு பரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தினத் தாக்குதலின் பின்னணியில் இந்திய உளவுத்துறை இருப்பதாக தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரி, அது தொடர்பான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆயினும் அந்த ஆதாரங்களை நீதிமன்றில் நீதிபதியிடம் மாத்திரமே வழங்க முடியும் என்றும் மைத்திரி தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது எனவும், ‘தமிழன்’ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தினத் தாக்குதல் நடைபெற்ற காலப்பகுதியில் இலங்கை – தேர்தலை எதிர்நோக்கியிருந்ததால், அரசியலை மையப்படுத்தி உளவு அமைப்புக்களால் இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டதாக, முன்னர் தனக்கு அறியக் கிடைத்ததாகவும் மைத்திரி தெரிவித்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் தம்மிடம் கூறியதாகவும் ‘தமிழன்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்