யுனிசெப் வாகனத்தை கெஹலிய பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு: சிஐடி விசாரணை

🕔 March 19, 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனம் தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களம் (சிஐடி) அண்மையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் – தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தமை தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கெஹலியவை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட வேன் 0 ஐக்கிய நாடுகளின் சர்வதேச சிறுவர் அவசர நிதியத்தினால் (யுனிசெப்) சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு, குறிப்பாக கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக பரிசாக வழங்கப்பட்டது என, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கைதிகள் மற்றும் சந்தேக நபர்களை ஏற்றிச் செல்ல – இந்த வேன் ஒருபோதும் பயன்படுத்தப்படக்கூடாது, குழந்தைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன், அந்த வாகனத்தை யுனிசெப் பரிசாக வழங்கியதாக புகார்தார் குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிபந்தனையை மீறி, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் போக்குவரத்துக்காக வாகனத்தைப் பயன்படுத்தியதாகவும் முறைப்பாட்டாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.

குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், குறித்த விடயம் தொடர்பில் சிஐடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்