கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளரின் பதவி பறிப்பு: முஸ்லிம் விரோதப் போக்கின் தொடர்ச்சி என இம்ரான் எம்.பி தெரிவிப்பு

🕔 March 17, 2024

கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றிய சிரேஷ்ட கல்வி நிர்வாக சேவையிலுள்ள முஸ்லிம் அதிகாரியின் பதவி பறிக்கப்பட்டு எந்தவித பதவியும் வழங்கப்படாது – அவர் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு உடன் செயற்படும் வண்ணம் இடமாற்றப்பட்டுள்ளமை தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண அமைச்சு செயலாளர் பதவிகள் – முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்டமையின் தொடர்ச்சியாக, கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளரின் பதவி பறிப்பு அமைந்துள்ளதாகவும் இம்ரான் மகரூப் கூறியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் சமீப காலமாக அரங்கேற்றப்படும் முஸ்லிம் விரோதப் போக்குகளின் மற்றுமொரு சம்பவம் இதுவென குறிப்பிட்டுள்ள அவர், நிலைமை இப்படியே நீடிக்குமாக இருந்தால் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் அதிகாரிகள் எவரும் பணி புரிய முடியாத நிலைமை ஏற்படுத்தப்படலாம் எனவும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

“ரணில் – ராஜபக்ஷ ஆட்சியில் – முஸ்லிம் விரோதப் போக்கு இன்னும் தொடர்கின்றது என்பதற்கு இவை சிறந்த உதாரணங்களாகும். எனவே. கிழக்கு மாகாண முஸ்லிம் சமுகம் விழித்தெழ வேண்டிய அவசர நிலை தற்போது ஏற்பட்டுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

முஸ்லிம் சமுகத்தின் உரிமைகள் தொடர்பாக – முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பேசுவார்கள் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்பது இவற்றின் மூலம் தெளிவாகத் தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எனவே, முஸ்லிம் சிவில் சமுக செயற்பாட்டாளர்கள், புத்தி ஜீவிகள், உலமாக்கள் என அனைவரும் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விடயங்கள் சமுக மயப்படுத்தப்பட வேண்டும். அதன் மூலம் முஸ்லிம் சமுகம் இந்த அநீதிகளுக்கெதிராக ஒன்றுபடவேண்டும். முஸ்லிம் அதிகாரிகள் பாதுகாக்கப்பட வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: ரமழான் மாத சலுகையை வழங்குவதில், கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் விரோத மனப்பாங்கு: இம்ரான் எம்.பி கவலை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்