மு.கா எம்பிகள் ஜனாதிபதியை சந்தித்தமை, ஹக்கீமின் ‘டீல்’ அரசியல்?

🕔 March 13, 2024

– மரைக்கார் –

முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அண்மையில் சந்தித்துப் பேசியிருந்தனர். ஆனால், அந்தச் சந்திப்பு அவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் என்றும் – கட்சியின் தீர்மானத்தின் அடிப்படையில் அந்தச் சந்திப்பு நடக்கவில்லை எனவும் மு.காங்கிரஸின் பிரதி செயலாளர் அறிவித்திருக்கிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பைசல் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் அலிசாஹிர் மௌலானா ஆகியோர் – மு.காங்கிரஸ் சார்பாக, ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்து கொண்டனர்.

மு.காங்கிரஸின் தீர்மானத்தை மீறி பல்வேறு தடவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பைசல் காசிம் மற்றும் ஹரீஸ் ஆகியோர் மஹிந்த, கோட்டா மற்றும் ரணில் அரசாங்கங்களுக்கு ஆதரவளித்துள்ளனர். ஆனால், அவர்களை எந்த வகையிலும் மு.காங்கிரஸ் தலைவர் தண்டிக்கவில்லை. ஆனாலும் மு.காங்கிரஸின் தீர்மானத்தை மீறி செயற்பட்டார் எனும் குற்றச்சாட்டில் ஹாபிஸ் நசீருடைய கட்சி உறுப்புரிமையைப் பறித்து, அதன் ஊடாக அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ஹக்கீம் இல்லாமலாக்கினார்.

ஹாபிஸ் நசீர் மீது கொண்ட தனிப்பட்ட குரோதம் காரணமாகவே, அவரை அவ்வாறு ஹக்கீம் பழிவாங்கினார் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். ஆனால், பைசல் காசிம், ஹரீஸ் ஆகியோர் தொடர்ச்சியாக கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்து வந்தாலும், அவர்கள் விடயத்தில் ஹக்கீம் எந்த நடவடிக்கையினையும் இதுவரை எதுத்ததில்லை.

பைசல் காசிம், ஹரீஸ் உள்ளிட்டோர் கட்சியின் தீர்மானமின்றி அரசாங்கத்துக்கு பல தடவை தமது ஆதரவை வழங்கிய நிலையில், கட்சித் தலைவர் ஹக்கீம் கூறியே – அவ்வாறு ஆதரவளித்ததாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

எடுத்துக்காட்டாக, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக – முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் தவிர, அந்தக் கட்சியின் ஏனைய 04 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர். இதனையடுத்து கட்சியின் தீர்மானத்துக்கு மாறாக இவர்கள் நடந்து கொண்டதாக மு.காங்கிரஸினர் கோபப்பட்டனர். ஆனால், கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் சொல்லித்தான் தாங்கள் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்ததாக மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் பகிரங்கமாக ஊடகங்களிடம் தெரிவித்தார். அதற்கு மு.கா. தலைவர் இதுவரையும் பதிலளிக்கவேயில்லை.

இப்போது ஜனாதிபதியை மு.காங்கிரஸ் எம்.பிகள் சந்தித்தமையும் கட்சியின் தீர்மானம் அல்ல என்று மு.காங்கிரஸ் பிரதிச் செயலாளர் அறிவித்திருக்கிறார். ஆனால், இந்தச் சந்திப்பின் பின்னாலும் மு.காங்கிரஸ் தலைவரின் அனுமதி இருக்கலாம் என்கிற சந்தேகம் பரவலாக உள்ளது. இல்லையென்றால், கட்சியின் அனுமதியின்றி ஜனாதிபதியை சந்தித்த எம்.பிகளுக்கு எதிராக மு.காங்கிரஸ் தலைவர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமல்லவா?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் போன்றோரை வைத்து, மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் ஒளிந்து விளையாடுகிறார் என்கிற குற்றச்சாட்டு கட்சிக்குள்ளும், வெளியிலும் உள்ளது.

அரசாங்கத்துடன் மு.கா. தலைவருக்கு நேரடியாக ‘டீல்’ அடிக்க முடியாத சந்தர்ப்பங்களில், அவர் ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் ஆகியோரை வைத்து தனது ‘டீலை’ முடிக்கின்றார் என்கிற குற்றச்சாட்டு பரவலாகவே உள்ளது.

இந்த ஆண்டு பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதி தேர்தல் நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. ஜனாதிபதியும் அதனை அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் ஜனாதிபதியை முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிகள் சந்தித்திருப்பதை ‘வெறும் நிகழ்வொன்றாாக’ பார்க்க முடியாது. ரணிலுக்கு மு.காங்கிரஸ் ஆதரவு வழங்குவதற்கான முன்னோட்டமாகவும் இதனைப் பார்க்க முடியும்.

மேற்படி சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் மற்றும் தேசிய காங்கிரஸ் தலைவைர் அதாஉல்லா ஆகியோரும் இருந்தனர்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக முஷாரப் எம்.பி களமிறங்குவதற்கான அதிக பட்ச சாத்தியங்கள் உள்ளன. அவரின் அண்மைக்கால உரை மற்றும் ரணில் விக்ரமசிங்கவுக்கான அவரின் ஆதரவை வைத்து இதனை அனுமானிக்க முடியும். மட்டுமன்றி, பிரதான முஸ்லிம் கட்சிகள் முஷாரப்புக்கு கதவு திறக்க மாட்டாது. சிலவேளை அதாஉல்லா அவரின் தேசிய காங்கிரஸில் போட்டியிடுமாறு முஷாரப்பை அழைக்கக் கூடும். அந்த அழைப்பு தன்னை எம்.பி ஆக்குவதற்கானது அல்ல என்பதை – நிச்சயமாக முஷாரப் அறிந்து கொள்வார். எனவே, ஐ.தே.கட்சியிலேயே அவர் போட்டியிடுவார் என கருத இடம் உள்ளது.

எனவே, எப்படிப் பார்த்தாலும் – பைசல் காசிம் மற்றும் ஹரீஸ் ஆகியோருக்கு எதிராக மு.கா. தலைவர் ஹக்கீம் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை. வரும் பொதுத் தேர்தலிலும் அவர்களுக்கு நிச்சயமாக வேட்புமனுக்களை ஹக்கீம் வழங்குவார்.

பிறகென்ன, இப்போது பைசல் காசிம் மற்றும் ஹரீஸுக்கு எதிராக பேசிய, எழுதிய முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள், ‘இனி என்ன செய்வது’ அல்லது ‘போனால் போகட்டும்’ என்று நினைத்துக் கொண்டு, பைஸலுக்கும் ஹரீஸுக்கும் வாக்களித்து விட்டு வருவார்கள்.

நமது மக்களுக்குத்தான் ‘சுட்டுப் போட்டாலும்’ ரோசம் வருவதில்லை அல்லவா?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்