ஜனாதிபதியை மு.கா. எம்பிகள் சந்தித்தமை அவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்: பிரதி செயலாளர் தெரிவிப்பு

🕔 March 11, 2024

– றிசாத் ஏ காதர் –

னாதிபதி ரணில் விக்ரமசிங்கவை முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் – அண்மையில் சந்தித்தமை, அவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் என, மு.காங்கிரஸின் பிரதி செயலாளர் மன்சூர் ஏ. காதர் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை சம்மாந்துறையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது – அவர் இதனைக் கூறினார்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் – கடந்த 06ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் சந்தித்தனர்.

முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பைசல் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் அலிசாஹிர் மௌலான ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

மேலும் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா மற்றும் எஸ்.எம்.எம். முஷாரப் ஆகியோரும் இந்தச் சந்தில் கலந்து கொண்டனர்.

இருந்த போதிலும் முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் – இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு இந்த சந்திப்புக்கான அழைப்புக் கிடைக்கவில்லை என்று அவர் கூறியிருந்தார்.

அதே சமயம் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்றூப் – இந்த சந்திப்பு அழைக்கப்பட்டிருக்கவில்லை.

இந்தப் பின்னணியில் கடந்த வெள்ளிக்கிமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய மு.காங்கிரஸ் பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ. காதர் குறித்த சந்திப்பு தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்;

“முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கட்சியின் உச்சபீட உறுப்பினர்களாவர். அவர்கள் எந்த நிகழ்வில் கலந்துகொள்வதாயினும் கட்சியின் உச்ச பீடத்தின் அனுமதியினை பெறவேண்டும்.

ஆனால் கட்சியின் உச்சபீடம் அண்மையில் கூடவுமில்லை, ஜனாதிபதியை நாடாளுமன்ற உறுப்பினர் சந்திப்பதற்கான அனுமதி பெறப்படவுமில்லை.

எனவே இந்த சந்திப்வை – நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலாகவே கருதவேண்டியுள்ளது” என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளர் எம்.எஸ். உதுமாலெப்பையும் கலந்து கொண்டார்.

தொடர்பான செய்தி: அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – ஜனாதிபதி சந்திப்பு; திருகோணமலை எம்.பிகளுக்கு அழைப்பில்லை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்