கிழக்கு ஆளுநரின் மகளிர் தின நிகழ்வு; அரசியலுக்காக ஆசிரியைகளை அடிமைகள் போல் நடத்துவதாக ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

🕔 March 8, 2024

– முன்ஸிப் அஹமட் –

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஞாயிற்றுக்கிழமை (10) திருகோணமலை கோணேஸ்வரா இந்து வித்தியாலய மைதானத்தில் ஏற்பாடு செய்துள்ள மகளிர் தின நிகழ்வில், திருகோணமலை மாவட்டத்திலுள்ள அனைத்து பெண் ஆசியர்களும் கலந்து கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த நிகழ்வில் கலந்து கொள்ளாதோருக்கு என்ன நடக்கும் என்று தெரியாது என அச்சுறுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் திருகோணமலை மாவட்ட செயலாளர் ரொஷான் அக்மீமண புகார் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இன்று (08) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது – அவர் இந்த விடயத்தைக் கூறினார்.

திருகோணமலை மாவட்ட பாடசாலைகளின் அனைத்து பெண் ஆசிரியர்களும் குறித்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என்றும், போக்குவரத்துக்கான செலவுகளை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள திருகோணமலை, கந்தளாய், கிண்ணியா, மூதூர், கோமரங்கடவல மற்றும் மொரவெவ உள்ளிட்ட பிரதேசங்களில் கடமையாற்றும் அனைத்து பெண் ஆசிரியர்களும் – ஆளுநர் நடத்தும் மேற்படி நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தப்பட்டுள்ளனர் என்றும் ரொஷான் அக்மீமண கூறினார்.

இதன்போது அதிபர் ஒருவர் இது தொடர்பில் ஆசிரியர்களுக்கு வாட்ஸ்ஸப் மூலம் விடுத்த அறிவித்தல் ஒன்றினையும் குறித்த ஊடக சந்திப்பில் – இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் திருகோணமலை மாவட்ட செயலாளர் வாசித்துக்காட்டினார்.

குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் அங்குள்ள ஆவணத்தில் கையொப்பமிட வேண்டும் என்றும், நிகழ்வில் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள் பற்றிய விபரங்கள் திங்கட்கிழமையன்று ஆளுநர் அலுவலகத்துக்கு வழங்கப்படும் எனவும் குறித்த அதிபர் விடுத்துள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளமையினையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இன்றைய தினம் திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் வாட்ஸ்ஸப் ஊடாக மேற்படி நிகழ்வில் ஆசிரியர்களை கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தி அனுப்பிய குரல் பதிவினையும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட செயலாளர் அங்கு ஒலிபரப்பினார்.

‘கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகளிர் தின நிகழ்வில், திருகோணமலை மாவட்டத்திலுள்ள அனைத்து பெண் ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டுமென, ஆளுநரின் வேண்டுகோளின் படி – மாகாண பிரதம செயலாளர், கல்வியமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோர் அறிவித்துள்ளனர்’ என, அந்தக் குரல் பதிவில் திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நிகழ்வில் கலந்து கொள்ளாதோர் தொடர்பில் ஆளுநர் விளக்கம் கோருவதற்கான சந்தர்ப்பம் உள்ளது எனவும் திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளரின் குரல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து – அந்த ஊடக சந்திப்பில், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் திருகோணமலை மாவட்ட செயலாளர் ரொஷான் அக்மீமண மேலும் பேசுகையில்,

சர்வதேச மகளிர் தினம் என்றால் என்ன? அதன் அர்த்தம் என்ன என்று கேள்வியெழுப்பிதோடு, வரலாறு முழுவதும் உலகிலுள்ள பெண்கள் தமது உரிமைகளுக்காக போராடியுள்ளதாக கூறினார்.

“ஆனால் கிழக்கு மாகாண ஆளுநரோ, பெண்கள் தினத்தின் அர்த்தத்தை திரிவுபடுத்தி, பெண்களை தங்கள் அடிமைகள் என நினைத்து, தங்கள் அரசியலுக்காக திருகோணமலை மாவட்டத்திலுள்ள பெண் ஆசிரியர்களை இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பலாத்காரப்படுத்தியுள்ளார்” என்றார்.

மேலும் முற்றிலும் முட்டாள்தனமான இந்தச் செயலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் என்கிற வகையில் தமது எதிர்ப்பைத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த நிகழ்வில் கலந்துகொள்ளாத ஆசிரியைகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் – அதனை இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்த்துப் போராடும் என்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் திருகோணமலை மாவட்ட செயலாளர் ரொஷான் அக்மீமண மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்