முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்கும் கிழக்கு ஆளுநர், ‘இப்தார்’ நிகழ்வை நடத்தப் போவதாக கூறுவது வெட்கக் கேடானது: அமைப்பாளர் அமீர்

🕔 March 5, 2024

– ஆக்கிப் –

கிழக்கு மாகாணத்தில் நிருவாக ரீதியாக முஸ்லிம்களை புறக்கணிப்புச் செய்துள்ள ஆளுநர் செந்தில் தொண்டான், நோன்பு துறப்பதற்கான (இப்தார்) ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக கூறியிருப்பது வெட்ககேடானது என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் ஏ.கே.அமீர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; ”கிழக்கு மாகாணம் 47வீதத்துக்கும் அதிகளவான முஸ்லிம்களை அதிகளவாக கொண்ட மாகாணம். இங்கு பகிர்ந்தளிக்கப்படும் வளங்கள் தொடக்கம் பதவிகள் வரை – விகிதாசார அடிப்படையில் கொடுக்கப்படுதல் வேண்டும்.

ஆனால் வடக்கும் கிழக்கும இணைந்திருந்த போது முஸ்லிம்களுக்குக் கிடைத்த பதவி நிலைகள் கூட, தற்போது கிழக்கு மாகாணத்தில் வழங்கப்படாது மறுக்கப்படுகின்ற ஒரு சூழல் தற்போதைய கிழக்கு ஆளுநரினால் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் நிருவாக சேவை விசேட தரத்தில் தேசிய ரீதியாக முதலாவது நிலையில் உள்ள ஆதம்பாவா மன்சூர் – தற்போது கிழக்கு மாகாண செயலாளர் தர பதவி நிலை வழங்கப்படாது புறக்கப்பட்டுள்ளார். அதேபோல் எம்.எம். நசீரும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் நிருவாக பதவி வழியில் சிரேஷ்டத்துவம் குறைந்த முஸ்லிம் அல்லாதோருக்கு கிழக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளை ஆளுநர் வழங்கியுள்ளார்.

இப்படி முஸ்லிம்களை அகெளரவப்படுத்தி, இவ்வாறான பல அநீதிகளை தொடர்ந்து செய்துகொண்டு ஆளுநர் செந்தில் தொண்டமான், முஸ்லிம்களுக்கு நோன்பு திறக்க உதவி செய்யப்போவதாக கூறுவது வேட்கக் கேடானது என்று – ஆளுநருக்கு தெரியவில்லையா” அமைப்பாள் அமீர் கேள்வியெழுப்பியுள்ளார்.

கிழக்கு ஆளுநரின் இவ்வாறான இனவாத செயற்பாடுகளை நியாயப்படுத்தி, ஒரு சில அரசியல்வாதிகள் கருத்துக்களை வெளியிடுகின்றமையினைக் காண்கின்றபோது அவருவருப்பாக உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

”காத்தான்குடி மக்கள் – முழு இலங்கைக்கும் ‘இப்தார்’ வழங்கும் செல்வத்துடன் வாழ்கிறார். அங்கு வந்து இப்தார் நிகழ்வுகளை நடத்தவுள்ளதாக ஆளுநர் கூறுவதானது, ‘கொல்லன் தெருவில் ஊசி விற்பதற்கு’ ஈடானதாகுகம்.

நோன்பு காலத்தில் முஸ்லிம்களுக்கு ‘இப்தார்’ நிகழ்வை நடத்துவதனால், முஸ்லிம்களுக்கு செய்கிற அநீதிகள் நீதியாகிவிடாது. இந்த இப்தார் நிகழ்வை காத்தான்குடி பள்ளிவாசல், முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் புறக்கணிக்க வேண்டும் அல்லது இந்த நிருவாக ரீதியாக மேற்கொள்ளப்படும் அநீதிகளுக்கு தீர்வினை பெற்றுக்கொண்டு விட்டு, இப்தார் நிகழ்வை அனுமதிக்க வேண்டும்.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள மாகாண பொறியியலாளர் முஸ்லிமாக இருப்பதனை தாங்கிக்கொள்ள முடியாமல் – ஆளுநரின் அழுத்தம் காரணமாக இடமாற்ற கட்டளை வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. ஒரு அதிகாரியில் ஏதாவது குறைகளைக் கண்டால் அல்லது குற்றம் சுமத்தப்பட்டால் முறையான விசாரணை நடத்தி அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுதல் அவசியம். ஆனால் அவ்வாறான எந்த ஒரு முறைப்பாடுகளும் இல்லாமல் வெறுமனே தான்தோன்றித் தனமாக ஆளுநரின் செயற்பாடு – கிழக்கு மாகாண முஸ்லிம்களை புன்படுத்தியுள்ளது.

எனவே இந்த விடயங்களை கருத்திற் கொண்டு – காத்தான்குடி பள்ளிவாசல், முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்