இரண்டு வயதுக்கு முன்பு குழந்தைகளுக்கு இனிப்பு உணவுகள் வேண்டாம்: டொக்டர் தீபால் பெரேரா

🕔 March 1, 2024

குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதால், இரண்டு வயதுக்கு முன்பு – இனிப்பு உணவு மற்றும் பானங்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு பெற்றோர்களுக்கு சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

டெய்லி மிரருக்குப் பேட்டியளித்த கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையின் குழந்தை நல வைத்தியர் டொக்டர் தீபால் பெரேரா; ”குழந்தைகளுக்கு இரண்டு வயதுக்குப் பிறகு மட்டுமே இனிப்பு உணவு பரிந்துரைக்கப்படுகிறது. அதே நேரத்தில் முதல் ஆறு மாதங்களில் தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

“சீனி மற்றும் இனிப்பான உணவு மற்றும் பானங்களை உட்கொள்வது அதிக எடை அல்லது உடல் பருமன் அதிகரிக்கும் அபாயத்துடன் தொடர்புடையது” என்றும் டெக்டர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

“பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களில் இனிப்புக்காகப் சீனி பயன்படுத்தப்படுகின்றன. மேலும் அவை ஒரு துண்டு பழம் அல்லது ஒரு பால் கிளாஸில் இருக்கும் இயற்கை சீனியிலிருந்து வேறுபடுகின்றன” என அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, குழந்தைகளுக்கு இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், அதிகரித்து வரும் வெப்ப காலத்தில் – சீனி சேர்க்கப்பட்ட உணவு மற்றும் பானங்களை உட்கொள்வதைத் தவிர்க்குமாறு அவர் மக்களை எச்சரித்தார்.

“வெப்ப காலத்தில் மக்கள் செயற்கை பானங்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக, இளநீர், பழச்சாறு போன்ற இயற்கை பானங்கள் மிகவும் நல்லது”என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்