பலஸ்தீன் குழந்தைகளுக்கான ஜனாதிபதி நிதியம் குறித்து விமர்சித்த ஹிருணிகாவுக்கு, லொயிட்ஸ் ஆதம்லெப்பை கண்டனம்

🕔 February 29, 2024

ஸ்ரேல் – பலஸ்தீன் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனிய குழந்தைகளுக்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ள நிதியம் தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவுத் தலைவி ஹிருணிகா பிரேமசந்திர – மனிதாபிமானமற்ற கருத்துக்களைக் கூறி விமர்சித்து பேசியிருந்தமைக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளர் லொயிட்ஸ் ஆதம்லெப்பை கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேற்படி நிதியம் தொடர்பில் – நேற்று (28) ஊடகங்களிடம் ஹிருணிகா பிரேமசந்திர கருத்துக் கூறியிருந்தார்.

அதனைக் கண்டித்து லொயிட்ஸ் ஆதம்லெப்பை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றில், இனவாத முகம்கொண்ட சஜித் பிரேமதாசவின் அணியில் இருக்கும் ஹிருணிகா – இவ்வாறு பேசியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில்;

இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்தத்தினால் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு, தனியாரிடமிருந்து பணம் சேகரித்து வழங்கும் பொருட்டு, நிதியமொன்றை ஜனாதிபதி ஆரம்பித்துள்ளார். இந்த நிதியத்துக்கு அரசாங்கமும் 01 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கவுள்ளது.

இந்நிதியத்துக்கு பல்வேறு தனியார் தரப்புக்களிடமிருந்தும் நிதியுதவிகள் கிடைத்து வருகின்றன. இப்படியான ஜனாதிபதியின் திட்டத்தை ஹிருனிக்கா போன்ற மனிதாபிமானமற்ற இனவாதிகளுக்கு தாங்க முடியாதுள்ளது.

நாடு அதள பாதாளத்தினுள் சென்ற காலத்தில் – நாட்டை பாரமெடுக்கும்படி கேட்கப்பட்டபோது, பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடிய சஜித் பிரேமதாசவின் அணியில் இருக்கும் ஹிருணிகா – இவ்வாறு பேசியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. தனி நபராக இலங்கையின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு – நாட்டு மக்களை காப்பாற்ற இவர்கள் சொல்லித்தர வேண்டியதில்லை.

வாயால் அரசியல் செய்யும் ஐக்கிய மக்கள் சக்தியினரிடமிருந்தும், பேஸ்புக் அரசியல் செய்யும் ஜேவிபியினரிடமிருந்தும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். குறிப்பாக சஜித் பிரேமதாசவை இஸ்லாமிய மக்கள் புரிந்து கொள்ள இது ஒரு சந்தர்ப்பமாகும்,

ஏற்கனவே தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தனது இனவாத முகத்தை காட்டிய சஜித், இப்போது ஹிருணிகா மூலம் தனது விஷ்வரூபத்தினை வெளிப்படுத்துகிறார்.

கோட்டாவின் ஆட்சிக் காலத்தில் ஜனாஷா எரிப்புக்கு முக்கிய பங்களிப்பை வழங்கிய நாலக்க கொடஹேவா மற்றும் டொக்டர் ஷாபி மீது கருக்கலைப்பு பழி சுமத்துவதில் பிரதானியாக செயற்பட்ட சன்ன ஜயசுமன போன்ற இனவாதக் கூட்டம் சஜித்திடம் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இது தெரிந்தும் ரவூப் ஹக்கீம் மற்றும் றிஷாட் பதியுதீன் இதுவரை ஒரு எதிர்ப்பு அறிக்கை கூட வெளியிடாமல் முஸ்லிம் தலைவர்களாக உலா வருகின்றனர். வெறுமனே பலஸ்தீன சால்வை அணிந்து நாடாளுமன்றம் வந்து ஊடகங்களுக்கு படம் காட்டும் போலித்தனமான ஹக்கீம், ஷாத் போன்றோரிடமும் மக்கள் விளிப்பாக இருக்க வேண்டும்“ என்றும் லொயிட்ஸ் ஆதம்லெப்பை தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்