பொதுமக்களுக்கும் நாடாளுமன்ற அலுவலர்களுக்கும் இடையில், இடைவெளியை ஏற்படுத்தும் விடயங்கள் தொடர்பில், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் எடுத்துரைப்பு

🕔 February 27, 2024

– முன்ஸிப் –

லங்கையை பொறுத்தவரை நாடாளுமன்றத்தினுடைய விழுமியங்கள், மரபுகள் மற்றும் விதிகள் – பொதுமக்களுக்கும் நாடாளுமன்ற அலுவலர்களுக்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி அனுஷா ரோஹனதீர தெரிவித்தார்.

இதனை கருத்தில் கொண்டு, அந்த இடைவெளியைப் பூர்த்தி செய்யும் முகமாகவே இன்றைய இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில், திறந்த நாடாளுமன்ற முறையினைப் பற்றிய கருத்திட்டம் நாடளாவிய ரீதியில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான துறை – இலங்கை நாடாளுமன்றத்துடன் இணைந்து, பல்கலைக்கழக உள்வாரி இளங்கலைப் பட்டதாரி மாணவர்களுக்கு ‘நாடாளுமன்ற செயற்பாடுகளும் ஒழுங்கு முறைகளும்’ எனும் தலைப்பில் நடத்திய குறுங்கால கற்கைநெறியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கும் நிகழ்வில் இன்று (27) பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்ட விடயங்களை அவர் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக்ததின் கலாசார பீட – அரசியல்துறை தலைவர் கலாநிதி எம். அப்துல் ஜப்பார் அவர்களது தலைமையில் தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தின் கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கௌரவ அதிதிகளாக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் மற்றும் கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி அனுஷா ரோஹனதீர மேலும் தெரிவிக்கையில்;

“பொதுமக்களை நாடாளுமன்றத்தினுடைய சட்டமன்ற வேலைகளில் சுறுசுறுப்பாக பங்குபற்றச் செய்வதுடன், இளங்கலை பட்டதாரிகளையும் உள்ளடக்கி திறந்த நாடாளுமன்றம் பற்றிய அறிவினை வழங்குவதன் ஊடாக, இலங்கை நாட்டையும் அரசாங்கத்தையும் கட்டி எழுப்புதல் திறந்த நாடாளுமன்ற முறைமையின் முக்கிய நோக்கமாக காணப்படுகிறது.

திறந்த நாடாளுமன்ற முறைமையானது – இளைஞர் பிரதிநிதிகளிடையே பரஸ்பர பொறுப்புணர்வை பிரதிபலிப்பதால், நாடாளுமன்றம் தொடர்பான கருத்தரங்குகள் கூட்டங்களில் இளைஞர்கள் கலந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்கி, அவர்களின் கருத்துக்களையும் கவனத்தில் கொண்டு அதனூடாக முடிவுகளை எடுக்க வழி செய்கிறது.

இலங்கையை பொறுத்தவரை திறந்த நாடாளுமன்றம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் செயல்திட்டங்களும் சகல பகுதிகளையும் உள்ளடக்கி நடைபெற்று வருகின்றன.

திறந்த நாடாளுமன்ற முறைமை பற்றிய மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள பிரத்தியேகமான சில வலைத்தளங்களும் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே திறந்த நாடாளுமன்ற முறைமை பற்றிய அறிவினை இலகுவாக பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது.

எனவே இந்த பெருமதியான வளங்களை உச்ச வினை திறனுடன் பயன்படுத்தி அதன் மூலம்  நாட்டு மக்கள் உச்ச பயனை பெற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.

நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவின் மக்கள் தொடர்பு அதிகாரி யாஸ்ரி முகம்மட் மற்றும் பல்கலைகழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன்போது, மேற்படி குறுங்கால கற்கை நெறியை நிறைவுசெய்த பல்கலைக்க மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி அனுஷா ரோஹனதீர – பல்கலைழக்கழக உபவேந்தரால் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்