அரச நிறுவனங்களின் 71 சதவீத தொலைபேசி இணைப்புகள் முறையாகச் செயற்படவில்லை: ஆய்வில் தகவல்

🕔 February 26, 2024

நாட்டிலுள்ள அரச நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகளில் 71% முறையாகச் செயற்படவில்லை என பேராதனைப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பேராசிரியர் வசந்த அத்துகோரலவின் வழிகாட்டலின் கீழ் – பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்கள மாணவர்கள் குழுவினால் இது தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அரச நிறுவனங்களைத் தொடர்புகொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகளில் 29% மட்டுமே சரியாக இயங்குவதாகவும், இவற்றில் 49% சேவைகள் இயங்கவில்லை என்றும், 22% செயல்பாட்டில் இருந்தாலும் யாருக்கும் பதிலளிப்பதில்லை என இந்தக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகங்களைச் சேர்ந்த கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஒதுக்கப்பட்ட உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகள் இந்த கணக்கெடுப்புத் தொகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

98 பிரதேச சபைப் பிரிவுகளில் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, 14% தொலைபேசி இணைப்புகள் இயங்கவில்லை, 42% தொலைபேசிகளுக்கு பதிலளிக்கப்படவில்லை, 44% தொலைபேசிகளுக்கு மட்டுமே பதிலளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 23மாநகர சபை பிரிவுகளில், 4% உத்தியோகபூர்வ தொலைபேசிகள் செயல்பாட்டில் இல்லை என்றும், 44% பதிலளிக்கப்படவில்லை என்றும் தெரியவந்தது.

இருந்தபோதிலும், பதிலளிக்கப்பட்ட அந்த உத்தியோகபூர்வ தொலைபேசிகளில் கூட, கொடுக்கப்பட்ட பதில்கள் தெளிவற்றதாகவும், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எந்தப் பயனும் அல்லது பொருத்தமும் இல்லை என்றும் பேராசிரியர் அத்துகோரள மேலும் கூறியுள்ளார்.

இந்த உத்தியோகபூர்வ தொலைபேசி இணைப்புகள் பொதுமக்களின் வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், உண்மையில் அவற்றைப் பயன்படுத்த முற்படும்போது – அவ்வாறு இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் அதிகாரிகளும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்