“புறக்கணித்தால் புறக்கணிப்போம்”: கிழக்கு ஆளுநருக்கு கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் எச்சரிக்கை

🕔 February 18, 2024

கிழக்கு மாகாண சபையிலுள்ள முக்கியமான பதவிகளுக்கு இன ரீதியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வந்த நடைமுறையை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மீறியுள்ளதாகவும், அந்த நியமனங்களில் தற்போது முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கின் கேடயம் தலைவரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்துள்ளார்.

இந்தப் புறக்கணிப்பு தொடருமாயின், ஆளுநரின் இந்த நடவடிக்கை தொடர்பில் கிழக்கு மாகாண பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் நிறுவனங்கள் அமைப்பிடம் முறையிடவுள்ளதாகவும், ஆளுநரின் கூட்டங்களை முஸ்லிம்கள் புறக்கணிப்பதற்கான தீர்மானத்தை எடுக்குமாறு வலியுறுத்தப் போவதாகவும் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையொன்றில் சபீஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில்;

‘கிழக்கு மாகாணத்தில் முக்கியமான பதவிகள் 07 உள்ளன. அவை – ஆளுநர் பதவி, பிரதம செயலாளர் பதவி மற்றும் 05 அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளாகும்.

இப்பதவிகள் இனப் பரம்பலுக்கு ஏற்ப பங்கீடு செய்யப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் கடந்த காலங்களில் ஆளுநர் பதவிக்கு சிங்களவர் ஒருவர் நியமிக்கப்படுவார். ஏனைய பதவிகளுக்கு முறையே 03 முஸ்லிம்களும், 02 தமிழர்களும், சிங்களவர் ஒருவரும் நியமிக்கப்பட்டு வந்தனர். ஆனால் இம்முறை இந்த நடைமுறை முற்றாக மீறப்பட்டுள்ளது.

அதற்கு முக்கிய காரணம், எமது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இது குறித்து எடுத்துக்கூறாமை, வரலாற்றை ஆளுநர் அறிந்துகொள்ளாமை மற்றும் இனப்பற்றில் நியாயத்தை ஆளுநர் இழந்தமை என கூறலாம்.

200 வருடங்கள் இந்நாட்டில் பெரும் கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்த மலையக மக்களுக்கு – வாக்குரிமையை மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமான் வாக்குரிமைகளைப் பெற்றுக் கொடுத்தார். ஆனால் அந்த மக்கள் இன்றுவரை மிகவும் வறுமைக் கோட்டுக்கு மிகவும் கீழேயே உள்ளனர்.

இவ்வாறான ஒரு சமூகத்திலிருந்து – கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை பெற்றுக்கொண்ட செந்தில் தொண்டமான், அடுத்த சிறுபான்மைச் சமூகங்கள் தொடர்பில் கவனமாக நடந்திருக்க வேண்டும். அரசியல் பழிவாங்கல்கள் அதிகம் நடைபெறும் கிழக்கு மாகாணத்தில் – தனது நீதமான நடவடிக்கைகள் மூலம், “இவ்வாறுதான் ஒரு ஆட்சி மேற்கொள்ளப்பட வேண்டும்” என்ற முன்மாதிரியை செய்து காட்டியிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை என்பது வேதனையாகும்.

இன்னும் காலம் கடந்து விடவில்லை. ஆளுநரே, விரைந்து செயற்பட்டு உங்கள் தவறுகளை திருத்தி சிறந்த ஆளுநர் என்பதை நிரூபித்துக் காட்டுங்கள்.

ஆனால், இதே தவறு தொடருமானால், கிழக்கு மாகாண பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் நிறுவனங்கள் அமைப்பிடம் ஆளுநரின் நியாயமற்ற செயற்பாடு தொடர்பில் முறையிடுவோம். ஆளுநரின் கூட்டங்களை முஸ்லிம்கள் புறக்கணிக்க தீர்மானம் மேற்கொள்றுமாறு அங்கு வலியுறுத்துவோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்