“கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் முஸ்லிம்களைப் பழிவாங்குகின்றார்”: மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அமீர் குற்றச்சாட்டு

🕔 February 18, 2024

– ஆக்கிப் –

லங்கை நிர்வாக சேவையில் சிரேஷ்டத்துவம் மிக்க முஸ்லிம்களை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் புறக்கணிப்பதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் தொழிலதிபருமான ஏ.கே. அமீர் குற்றச்சாட்டினார்.

அட்டாளைச்சேனை நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (17) அட்டாளைச்சேனை லொயிட்ஸ் வரவேற்பு மண்டபத்தில் ‘கல்வி விருது விழா’ நேற்று (17) இடம்பெற்றது. அதில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே, அவர் இதனைக் கூறினார்.

அட்டாளைச்சேனை நலன்புரி அமைப்பின் தலைவர் அன்வர் நெளசாத் இந்த நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். அங்கு அமீர் தொடர்ந்து பேசுகையில்;

“கற்றவர்கள் கெளரவிக்கப்படுகின்ற ஒரு விழாவில் பேசக் கிடைத்தமைக்கு, எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன். பலரும் பல விடயங்களை இங்கு பேசினாலும், இந்த சபையில் பேசுவதற்குப் பொருத்தமானது எனக்கருதி, சில விடயங்களை பேச விரும்புகிறேன்.

இலங்கை நிருவாக சேவையில் சிரேஷ்டமான தரங்களையுடைய முஸ்லிம்கள், கிழக்கு மாகாண சபையில் – உரிய இடம் வழங்கப்படாமல் பழிவாங்கப்படுகின்றனர்.

சிரேஷ்டத்துவம் மிகுந்த முஸ்லிம் அதிகாரிகளை அவமானப்படுத்தி, சிரேஷ்டத்துவம் குறைந்தவர்களுக்கு – ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளை கிழக்கு ஆளுநர் கொடுத்துள்ளார்.

இந்த அநியாயத்தைக் கேட்பதற்கு யாருமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் உட்பட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளனர். நீங்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்தினை செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பைசல் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ் உள்ளிட்ட பலர் இந் நிகழ்வில் கலந்து அதிதிகளாக கலந்து கொண்டனர்.

தொடர்பான செய்தி: இனவாதத்துடன் செயற்படும் கிழக்கு ஆளுநர் செந்தில்; முஸ்லிம்களுக்கென இருந்த ஒரேயொரு பதவியையும் பறித்தெடுத்த பரிதாபம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்