“முடிந்தால் செய்து காட்டட்டும்”; உதுமாலெப்பைக்கு அதாஉல்லா சவால்: நேரம் பார்த்து அடிக்கிறாரா?

🕔 February 16, 2024

– மரைக்கார் –

தேசிய காங்கிரஸில் இருந்தமையினால்தான் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை – அட்டாளைச்சேனையில் சில விடயங்களை சாதித்துக் காட்டியதாகவும், அவர் இப்போது அந்தக் கட்சியிலிருந்து விலகி – முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துள்ள நிலையில், ”முடிந்தால் எதையாவது சாதித்துக் காட்டட்டும்” என்றும், தேசிய காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா சவாலொன்றை முன்வைத்துள்ளார்.

அட்டாளைச்சேனையில் நேற்று (15) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, இந்த சவாலினை அவர் விடுத்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் காலத்தில் – முஸ்லிம் காங்கிரஸில் இணைந்திருந்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏ.எல்.எம். அதாஉல்லா, அஷ்ரப் மரணத்தின் பின்னர், தற்போதைய மு.கா. தலைவருடன் முரண்பட்டுக் கொண்டு – மு.காங்கிரஸிலிருந்து வெளியேறினார். அப்போது அதாஉல்லாவுடன் சேர்ந்து கொண்டு, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.எஸ். உதுமாலெப்பையும் மு.காங்கிரஸை விட்டுப் பிரிந்தார்.

இதன் பின்னர், அதாஉல்லா தலைமையில் தேசிய காங்கிரஸ் கட்சி உருவாக்கப்பட்டது. அந்தக் கட்சியில் தேசிய அமைப்பாளராக எம்.எஸ். உதுமாலெப்பை பதவி வகித்தார். ‘தலைவன்’ மற்றும் ‘தளபதி’யாக’ தேசிய காங்கிரஸில் இருவரும் செயற்பட்டனர்.

இந்தக் காலத்தில் அதாஉல்லா நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டு – பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்தார். அதேபோன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினராக வெற்றி பெற்ற உதுமாலெப்பை – மிக முக்கிய மாகாண அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொண்டார்.

அக்கரைப்பற்றின் வாக்குகளை உதுமாலெப்பைக்கு அதாஉல்லா பெற்றுக் கொடுத்தமையினாலும், அட்டாளைச்சேனையின் வாக்குகளை அதாஉல்லாவுக்கு உதுமாலெப்பை பெற்றுக் கொடுத்ததாலும் மேற்படி இருவரும் அரசியலில் வெற்றி வாகை சூடிவந்தனர்.

இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு தேசிய காங்கிரஸிருந்து எம்.எஸ். உதுமாலெப்பை வெளியேறினார். உள்ளூர் அரசியலில் இந்த வெளியேற்றம் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. உதுமாலெப்பையின் வெளியேற்றத்துடன் அதாஉல்லாவின் அரசியல் அஸ்தமித்து விடும் என்கிற பேச்சுகளும் இருந்தன. காரணம் – தேசிய காங்கிரஸ் சுறுசுறுப்பாக செயற்படுவதற்கு உதுமாலெப்பைதான் பிரதான காரணமாக இருந்தார். மட்டுன்றி, அட்டாளைச்சேனையிலிருந்து அதாஉல்லாவுக்கு உதுமாலெப்பை பெற்றுக் கொடுத்த வாக்குகள் இல்லாமல் போனால், அதாஉல்லாவால் நாடாளுமன்றம் செல்ல முடியாது என்றும் கணிக்கப்பட்டது.

தேசிய காங்கிரஸிலிருந்து வெளியேறிய உதுமாலெப்பை – முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார். ஆனால் அவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் சேர்ந்து கொள்வார் என்கிற பேச்சுகளும் இருந்தன. உதுமாலெப்பையின் சொந்த ஊரில் அதிக வாக்குகளை முஸ்லிம் காங்கிரஸ் வைத்திருப்பதால், அந்தக் கட்சியுடன் இணைந்தால் ‘நோகாமல் நொங்கு எடுக்கலாம்’ என உதுமாலெப்பை கணக்குப் போட்டிருக்கக் கூடும்.

ஆனால், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த – முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீரும் அவருடைய ஆதரவாளர்களும் உதுமாலெப்பையை எதிர்க்கத் தொடங்கினர். முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவும் உதுமாலெப்பையுடன் விலகியே நின்று வருகிறது.

இதன் காரணமாக, தனது சொந்த ஊரான அட்டாளைச்சேனையில் – முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆதரவான வாக்குகளில் கணிசமான தொகையை பெற்றுக் கொள்ள முடியாத நிலை உதுமாலெப்பைக்கு ஏற்பட்டுள்ளது. ஏதோ ஒரு தேர்தலில் உதுமாலெப்பை எதிர்காலத்தில் களமிறங்கினால், அட்டாளைச்சேனையில் மு.காங்கிரஸ் ஆதரவு வாக்குகளையே முழுவதுமாக உதுமாலெப்பையால் பெற்றுக் கொள்ள முடியாமல் போகும்.

இது மட்டுமன்றி, முஸ்லிம் காங்கிரஸில் மீளவும் உதுமாலெப்பை இணைந்த போது, அவருக்கு கட்சிக்குள் பிரதானமான ஒரு பதவி வழங்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு உதுமாலெப்பையின் ஆரவாளர்களிடம் இருந்தது. ஆனால் முஸ்லிம் காங்கிரஸின் ‘பிரதி தேசிய அமைப்பாளர்’ பதவியே உதுமாலெப்பைக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதனால் உதுமாலெப்பை தரப்பு கடும் சோர்வில் உள்ளனர். உதுமாலெப்பையை கட்சிக்குள் எடுத்து – மு.கா தலைவர் ரஊப் ஹக்கீம் ‘கழுத்தறுத்து விட்டார்’ என்கிற முணுமுணுப்புகளும் உதுமாலெப்பை தரப்பினரிடையே உள்ளது.

இவ்வாறான பின்னணியில்தான், “முடிந்தால் உதுமாலெப்பை சாதித்துக் காட்டட்டும்” என்கிற சவாலை – அதாஉல்லா விடுத்திருக்கிறார்.

தேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை பிரிந்து சென்ற பின்னர், தன்னுடன் உதுமாலெப்பை இல்லாமலேயே அதாஉல்லா – நாடாளுமன்ற உறுப்பினராக வென்று காட்டியிருக்கிறார். அதேபோன்று, ”நான் இல்லாமல் – உன்னால் முடிந்தால் அரசியலில் வென்று காட்டு” என்பதே உதுமாலெப்பைக்கு அதாஉல்லா விடுத்துள்ள சவாலின் உள் அர்த்தமாகும்.

கள நிலைவரங்களைகக் கணித்து, நேரம் பார்த்து அடித்திருக்கிறார் அதாஉல்லா.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்